பாலியல் அத்துமீறல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபியை சஸ்பென்ட் செய்யாதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில், இந்தப் புகாரை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க கடந்த 1 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி கோமதி நியமனம் செய்யப்பட்டிருந்த சிலமணி நேரத்திலேயே, விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி, எஸ்.பி. முத்தரசி இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கே இந்த நிலையா என, தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான புகாரை 01.03.2021 அன்று தானாக ஏற்று, இந்த வழக்கை விசாரிக்க முன்வந்தது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடே ஷே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, இன்று (12.03.2021) வழக்கு விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?

பாலியல் புகார் கொடுக்கவந்த பெண் எஸ்.பியை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பியை சஸ்பெண்ட் செய்தது ஏன்? என நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் கேள்வியெழுப்பியதோடு; இதுதொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே