போலீசார் காவலில் உயிரிழந்த மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?.. ஐகோர்ட் கிளை கேள்வி!!

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், வழக்கு பதியவில்லையெனில், முழு விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே எனது மகன் மகேந்திரன் உயிரிழந்தான். ஆகவே எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில், விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், 2 மருத்துவர்களை விசாரிக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு, தற்போது வரை ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதி சிபிசிஐடியின் பதில் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து, மகேந்திரன் வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், முழு விசாரணையை முடித்து 1 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே