குறட்டை விடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், உடன் தூங்குபவர்களின் குறட்டையால் பலரும் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள். தூங்கும் நேரத்தில் அருகில் ஒருவர் குறட்டை விட்டால் அது எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.
குறட்டை விடுபவர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. அவ்வப்போது குறட்டை விட்டால் கூட பரவாயில்லை. தினமும் குறட்டை விடுபவர்கள், குறட்டையின் சத்தம் கூடி குறைந்தால் அது மிகவும் ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆண்களில் நான்கில் ஒருவருக்கும் பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் இரவில் குறட்டை ஏற்படுவதாக நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
குறட்டை எப்படி ஏற்படுகிறது?
சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறுவதால் குறட்டை ஏற்படுகிறது.
தூங்கும்போது உங்கள் நாக்கு, தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. அந்த நேரத்தில் காற்று செல்லும்போது சுவாசப்பாதை சுருங்கியிருப்பதால் திசுக்கள் அதிர்வுறுகின்றன. மேலும் மல்லாந்து படுக்கும்போது நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் சுவாசப் பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது.
குறட்டை விடுவது ஆபத்தா?
குறட்டை விடுவதை பெரும்பாலும் ஒரு சாதாரண பிரச்னையாக நினைத்தாலும் அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவ்வப்போது குறட்டை வந்தால் பெரிதாக பிரச்னை இல்லை.
ஆனால், தினமும் குறட்டை விடுவது, அதிக நேரம் குறட்டை விடுதல், குறட்டையின் சத்தத்தில் மாறுபாடு இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது.
ஏனெனில் குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்போது மூச்சு அதிகமாக உள்ளிழுக்கப்படும்போது சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு முழுவதுமாக மூச்சு நின்றுவிட கூட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதய நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். மூச்சுத்திணறல் குறட்டைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஸ்லீப் அப்னியா தூக்கக் கோளாறும் காரணமாக இருக்கலாம்.
குறட்டை ஏன் ஏற்படுகிறது?
உடல் பருமன் அல்லது அதிக எடை குறட்டை ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மேலும் மூக்கடைப்பு, சைனஸ் பிரச்னை, தொண்டைப் பிரச்னைகள், தைராய்டு, மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை ஏற்பட காரணமாகலாம். எனினும் சில பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்வதன் மூலம் குறட்டை வராமல் தடுக்கலாம்.
உடல் பருமன்
உடல் எடை அதிகரித்த பின்னர்தான் குறட்டை விடும் பழக்கம் உங்களுக்கு வந்தது என்றால் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கலாம். பெரும்பாலாக உடல் பருமன் கொண்டவர்கள் கழுத்துப் பகுதியில் அதிக கொழுப்பைக் கொண்டிருக்கிறார்கள். இது சுவாசப்பாதையின் அளவைக் குறைக்கிறது.
உடல் பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்கும் பட்சத்தில் குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
தூங்கும் நிலை
தூங்கும் நிலையைப் பொருத்தும் குறட்டை ஏற்படுகிறது. மல்லாந்து படுத்தால் குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் அல்லது குறட்டை ஏற்படுவது தொடர்ந்து அதிகரிக்கலாம். ஏனெனில் மல்லாந்து படுக்கும்போது சுவாசப்பாதைகள் அதிகம் சுருங்குகின்றன.
எனவே, தூங்கும்போது பக்கவாட்டில் படுத்தால் குறட்டையின் தீவிரம் மற்றும் அதிர்வெண் கணிசமாகக் குறைகிறது.
சுவாசப்பாதை
மூக்குத் துவாரங்களை நன்றாக திறந்து வைப்பதன் மூலமாக குறட்டையைத் தடுக்கலாம். அதாவது மூக்கடைப்பு உள்ளிட்ட நாசித் துவாரங்களை அடைக்கக்கூடிய வகையில் இருக்கக்கூடாது.
சூடான எண்ணெய் மசாஜ் அல்லது நாசியில் சில சொட்டுகள் எண்ணெய் விடுவதன் மூலம் மூக்கடைப்பை சரி செய்யலாம். படுக்கைக்கு முன் சூடாக தண்ணீர் அல்லது தேநீரும் அருந்தலாம்.
உடல் நீர்ச்சத்து
உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது குறட்டையைத் தவிர்ப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க உதவும்.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது சுவாசப் பாதையில் காற்றின் சரியான ஓட்டத்தைத் தடுத்து குறட்டை ஏற்படுத்தும்.
எனவே ஆண்கள் தினமும் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் அதேநேரத்தில் பெண்கள் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
புகை பிடித்தல், மது அருந்துதல்
மேல் சுவாசப்பாதை வீக்கம் காரணமாக புகை பிடிப்பவர்களில் குறட்டை ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். புகைபிடிப்பதை விட்டுவிடுவது குறட்டைக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கும் என்கின்றனர்.
அதுபோல, ஆல்கஹால் என்பது சுவாசப்பாதையைச் சுற்றியுள்ள தசைகளை தளர்த்தும். எனவே, படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன்பு வரை குடிப்பதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள இவற்றை தினமும் முயற்சி செய்தால் வெகு விரைவில் மாற்றங்களைக் காணலாம் என்றும் இதனை முயற்சி செய்தும் பயனில்லை என்பவர்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.