நான் போலீஸ் இல்லை பொறுக்கி எனும் நடிகர் விக்ரம் பட காட்சிகளை சென்னை அம்பத்தூரில் நிஜமாக்கிய கோயம்பேடு போக்குவரத்து காவலரால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளான குடியிருப்பு வாசிகள்.
சென்னை அம்பத்தூர், ஒரகடம், ஏ.கே.ஏ நகர், பெரியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (48). இவர் கோயம்பேடு போக்குவரத்து பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முருகன். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். முருகன்(40). இவர், தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் அருகில் சாலை ஓரமாக நிறுத்துவது வழக்கம். இது தொடர்பாக முருகனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார் மது போதையில் முருகனிடம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகுமார், முருகனின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளி உள்ளார். மேலும், அவர் முருகனை ஆபாசமாக திட்டியதோடு, அடிக்கவும் பாய்ந்துள்ளார். இதனையடுத்து முருகன் அங்கிருந்து கடைக்கு சென்றுவிட்டார். இருப்பினும் ஆத்திரம் தீராத ஏட்டு கிருஷ்ணகுமார், முருகன் வீட்டு அருகே குடிபோதையில் சென்று குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து அவரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்த முயன்றனர்.
அவர் அங்கிருந்து செல்லாமல், தொடர்ந்து ஆவேசமாக பேசிய படி தனது அரைக்கால் சட்டையை கழற்றி நிர்வாணமாக தெருவில் நின்றபடி பெண்களிடம் அணுறுப்பை காட்டியுள்ளார். காவலரின் அறுவறுப்பான செயலைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் அலறியபடி வீட்டுக்குள் ஓடினார்கள். இது குறித்து முருகன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், புகாரை பெற்று கொண்ட போலீசார் நேற்று இரவு வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இதனையடுத்து, முருகன் அம்பத்தூரில் உள்ள மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
மேலும், போக்குவரத்து போலீஸ் கிருஷ்ணகுமார் குடிபோதையில் செய்த அட்டகாசங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க கூடிய காவல் துறை ஏட்டு குடிபோதையில் ஆபாசமாக பேசி, தனது அந்தரங்கத்தை காட்டி நிர்வாணமாக நடந்து கொண்ட சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.