புனேவில் கியான் பாரே சின்ட்ரோம் (Guillain-Barre syndrome) நோய் குடிநீர் மூலம் பரவுவதாகத் தெரிய வந்துள்ளது. குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் – எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? இவற்றில் குடிப்பதற்குப் பாதுகாப்பான நீர் எது? எந்த நீர் அதிக தூய்மையானது? ஊட்டச் சத்துகள் அதிகமுள்ள நீர் எது?
இந்தக் கட்டுரையின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
தண்ணீர் என்பது H2O. தண்ணீர் மூலக்கூறு 2 ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்சிஜன் அணுவால் ஆனது. இதுபோன்ற லட்சக்கணக்கான மூலக்கூறுகள் ஒன்றிணைந்து ஒரு துளி நீரை உருவாக்குகின்றன.
பூமி 71% தண்ணீரால் நிரம்பியுள்ளது. இதில் 96.5% கடலில் உள்ளது. பூமியில் உள்ள நீரில் 1% மட்டுமே குடிக்க உகந்ததாக இருக்கிறது.
மனித உடல் சுமார் 60-70% தண்ணீரால் ஆனது. மனித உடலின் செயல்பாட்டில் தண்ணீர் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான் நாம் எந்த வகையான தண்ணீரைக் குடிக்கிறோம் என்பதும் முக்கியமாகிறது.
குடிநீரின் தரம்
நீரின் தரத்தை அளவீடு செய்து அது குடிப்பதற்கு உகந்ததா என்பதைக் கண்டறிய இந்திய தர நிலைகள் பணியகம் சுமார் 60 பரிசோதனைகளைப் பரிந்துரைத்துள்ளது. இவை குடிநீருக்கான இந்திய தரநிலை விவரக் குறிப்புகள்-10500 என அழைக்கப்படுகின்றன.
குடிநீரின் பி.ஹெச், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய தர நிலைகள் பணியக அளவுகளின்படி 6.5 முதல் 8.5-க்குள் இருக்க வேண்டும்.
தண்ணீரில் பல உப்புகளும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. அவற்றின் சரியான அளவுகளை அளவீடு செய்ய டிடிஎஸ் பரிசோதனை செய்யப்படுகிறது.
தண்ணீரில் இருக்கும் டிடிஎஸ் எனப்படும் மொத்த கரைந்த திடப் பொருள்கள் ஒரு லிட்டருக்கு 500 மில்லிகிராமிற்கு மேலோ 100 மில்லி கிராமிற்கு கீழோ இருக்கக்கூடாது என இந்திய தரநிலைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
தண்ணீரின் டிடிஎஸ் 100க்கு கீழ் இருந்தால், அதில் உடலுக்குத் தேவையான உப்புகள் இல்லை என்று பொருள். தண்ணீரின் டிடிஎஸ் 500-க்கு மேல் இருந்தால் அந்த நீர், கடின நீர் என அழைக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் குடிக்க தகுதியானது அல்ல.
தண்ணீரில் இருக்க வேண்டிய உப்புகளின் அளவுகளையும் பிஐஎஸ் நிர்ணயம் செய்துள்ளது.
ஒரு லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டிய உப்புகள்
- பைகார்பனேட்ஸ் 200 மி.கி.
- கால்சியம் 200 மி.கி.
- மெக்னீசியம் 30 மி.கி.
- நைட்ரேட் 45 மி.கி,
- ஆர்சனிக் 0.01 மி.கி
- செம்பு 0.05 மி.கி.
- குளோரைட்ஸ் 250 மி.கி
- சல்ஃபேட் 200 மி.கி.
- ஃபுளோரைடு 200 மி.கி.
- இரும்பு 0.3 மி.கி
- பாதரசம் 0.01 மி.கி.
- துத்தநாகம் 5 மி.கி.
தண்ணீரில் அளவுக்கு அதிகமாக உப்புகள் இருப்பதன் பக்க விளைவுகள்

தண்ணீரில் உப்புகளின் அளவு அதிகரித்தால், அது உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.
- ஃபுளோரைடு 1 மில்லிகிராமிற்கு மேல் இருந்தால் பல் ஃபுளோரோசிஸ் ஏற்பட வாய்ப்புள்ளது
- சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால் ரத்த அழுத்த பிரச்னைகளை ஏற்படுத்தலாம்
- வேளாண் உரங்களில் இருந்து நைட்ரேட் குடிநீர் மூலம் உடலுக்குள் சென்றால் அது ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவைக் குறைத்து, மூச்சு விடுவதில் சிரமம், தலை சுற்றல், கண்களின் பார்வை நீலமாக மாறுவது போன்றவை ஏற்படக் கூடும். இது ‘புளூ பேபி சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகப் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும்.
- தண்ணீரில் ஆர்சனிக் அதிகம் இருந்தால், தோலில் வெண் புள்ளிகள் ஏற்படும்.
- தண்ணீரில் கால்சியம் அளவு குறைவாக இருந்தால் அது எலும்புகளை பாதிக்கக்கூடும்
- குறைவான டிடிஎஸ் உள்ள குடிநீர் நரம்பு மண்டலத்தைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
தண்ணீரின் வகைகள் மற்றும் அதன் சாதக, பாதகங்கள்
குழாய் நீர்

நமது வீடுகளுக்கு ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்களில் இருந்து குழாய் மூலம் வரும் குடிநீரில் குளோரினேற்றம் செய்யப்படுகிறது, அதாவது குளோரின் கலக்கப்படுகிறது அல்லது ஓசோன் மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறைகள் தண்ணீரின் தூய்மையை அதிகரிக்கச் செய்யப்படுகின்றன.
இதிலிருக்கும் அபாயங்கள் என்ன? இந்த முறையில் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் அனைத்தும் கொல்லப்படுவதில்லை. எனவே தொற்று பரவ வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.
குழாய்கள் பல தூய்மையற்ற பகுதிகளைக் கடந்து செல்கின்றன. அவை வெடித்தாலோ, கசிந்தாலோ, தண்ணீர் மாசுபடும். அது அபாயகரமானது.
ஆறு, கிணறு, ஆழ்துளை கிணற்று நீர்
பெரும்பாலும் கிராமங்களிலும் நகரங்களிலும், கிணறு அல்லது ஆழ்துளை கிணற்று நீர் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
பிபிசி மராத்தியிடம் இதுகுறித்துப் பேசிய மருத்துவர் அவினாஷ் போண்ட்வே, “கிணறு அல்லது அழ்துளை கிணற்று நீர், நிலத்திலிருந்து கிடைக்கிறது. கழிவுநீர் குழாய்கள் அதே கிராமத்தின் வழியாக, அதே பக்கத்தில் செல்கின்றன. எனவே அவற்றிலிருந்து பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், கிணற்று நீரில் அதிக அளவில் நுழைய முடியும்,” என்கிறார்.
மேலும், “இதன் காரணமாக, கிணற்று நீர் மாசடைவதுடன், நிலத்தில் இருந்து வரும் பல வகையான உப்புகளும், ரசாயனங்களும் அத்துடன் கலந்துவிடுகின்றன. இது பல வகையான பிரச்னைகள் அல்லது கோளாறுகளை ஏற்படுத்தலாம். அது வயிறு தொடர்பான நோய்களையும் ஏற்படுத்தலாம். எனவே கிணற்று நீரைப் பயன்படுத்துவோர் அதை நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொதிக்க வைத்த குடிநீர்
தண்ணீரை வடிகட்டுவது அதிலிருக்கும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. ஆனால் நீரில் இருக்கும் வைரஸ் மற்றும் ரசாயனங்களை வடிகட்ட முடியாது.
இந்தத் தண்ணீரைக் கொதிக்க வைப்பது, அதாவது அதை 100 டிகிரி செல்சியல் என்ற கொதிநிலைக்குக் கொண்டு வருவது அதிலிருக்கும் பெரும்பாலான பாக்டீரியாக்களை கொன்றுவிடும்.
ஆனாலும் சில வைரஸ்கள் அழிக்கப்படுவதில்லை. ஒற்றை செல் உயிரினமான அமீபா போன்றவை அழிக்கப்படுவதில்லை. அவை கொதிக்கும் நீரிலும் பிழைத்திருக்கும் ஆற்றல் பெற்றவை. இவை வாந்தி, பேதி, மற்றும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர்

இந்த வார்த்தைகள் தொடர்ந்து விளம்பரங்களில் ஒலிக்கின்றன.
ஆர்ஓ என்றால் ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ். இந்தச் செயல்முறையில் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, மற்றும் நச்சுகள் அழிக்கப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில், உப்புகள் போன்ற ஊட்டச்சத்துகளும் தண்ணீரிலிருந்து நீக்கப்படுகின்றன.
ஆக்டிவேடட் கார்பன் என்ற செயல்முறை தண்ணீரில் இருக்கும் கரிம ரசாயனங்களை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரின் நிறம் மற்றும் சுவையைப் பாதிக்கும் மாசுக்கள், ரசாயன உரங்களின் கசடுகள், மற்றும் அபாயகரமான ரசாயனங்களை ஆக்டிவேட்டட் கார்பன் வடிகட்டிகள் நீக்குகின்றன. இருப்பினும், அது தண்ணீரில் உள்ள அபாயகரமான மைக்ரோபாக்டீரியாவை நீக்குவதில்லை.
யூ.வி. செயல்முறையில், மைக்ரோபாக்டீரியாக்கள் அல்ட்ராவைலட் கதிரியக்கம் மூலம் கொல்லப்படுகின்றன. ஆனால் தண்ணீரில் இருக்கும் ரசாயன மாசுகள் அகற்றப்படுவதில்லை.
இந்தச் செயல்முறைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறைபாடு இருப்பதால், பல வடிகட்டிகள் இந்த மூன்று செயல்முறைகளையும் (ஆர்ஓ, ஆக்டிவேட்டட் கார்பன் பிறகு யுவி) ஒருங்கிணைக்கின்றன.
இந்தத் தண்ணீர் தூய்மையானது, ஆனால் அதில் ஊட்டச்சத்து ஏதும் இல்லை. அதுதவிர இந்த வடிகட்டிகளில் இருந்து கழிக்கப்படும் உபயோகப்படுத்த முடியாத தண்ணீரின் அளவும் மிக அதிகம். நீங்கள் பயன்படுத்தும் வடிகட்டிகளை அவ்வப்போது தூய்மைப்படுத்திப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
இதுகுறித்துப் பேசிய மருத்துவர் அவினாஷ் போண்ட்வே, “ஆர்ஓ தண்ணீர் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது அல்லது பல பகுதிகளில் ஆர்.ஓ. தண்ணீர் பெரிய பாட்டில்களில் அடைத்து வணிக ரீதியாக விற்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.
ஆர்.ஓ. வடிகட்டியில் தண்ணீர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூய்மைப்படுத்தப்படுகிறது. பல வகையான பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் சில வைரஸ்கள் இதைக் கடந்தும் வரக்கூடும். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால், ஆர்.ஓ. செய்வதால் உடலுக்குத் தேவையான பல்வேறு வகையான உப்புகளும், தாதுப் பொருட்களும் தண்ணீரில் இருந்து அழிக்கப்படுகின்றன” என்கிறார்.
“எனவே, நமது உடலுக்குத் தேவையான உப்புகள் கிடைக்காதது, கை, கால்களில் உணர்வின்மை, நடப்பதற்கு வலிமையில்லாமல் போவது, தலை சுற்றல் போன்ற பிரச்னைகளை உருவாக்கலாம்” என்றும் எச்சரிக்கிறார்.
பாட்டில் குடிநீர்

ஆர்.ஓ மற்றும் பிற வடிகட்டும் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் விற்கப்படுகிறது. அவற்றுடன் தாதுப் பொருட்கள் சேர்க்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படுவது உண்டு. இதனால்தான் தயாரிக்கும் நிறுவனத்தை பொறுத்து பாட்டிலில் விற்கப்படும் தண்ணீரின் சுவை மாறுபடுகிறது.
ஆனால் அதுபோன்ற தண்ணீரை வாங்கும்போது, அது எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது, எப்போது பாட்டிலில் அடைக்கப்பட்டது, அதில் இருக்கும் உப்புகளின் அளவு, தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கின் வகை போன்ற அனைத்தும் முக்கியமானவை. பாட்டில் குடிநீருக்கு காலாவதி தேதி இருப்பதை நினைவில் கொள்வது முக்கியம்.
காய்ச்சி, வடித்த நீர்
இதில் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டு, நீராவி சேகரிக்கப்படுகிறது. அது குளிரும்போது மீண்டும் தண்ணீராக மாறுகிறது. இது காய்ச்சி வடித்த நீர். இதுவே மிகவும் தூய்மையான நீர்.
ஆனால் இந்தத் தண்ணீரில் எந்த வைட்டமின்களும் உப்புகளும் இல்லை. எனவே, இந்தத் தண்ணீருக்கு எந்த ஊட்டச்சத்து மதிப்பும் இல்லை. இந்தத் தண்ணீர் பெரும்பாலும் ஆய்வகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் எந்த நீரை குடிக்க வேண்டும்?
மருத்துவர் அவினாஷ் போண்ட்வே சொல்கிறார், “தண்ணீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் ரசாயனங்களை எந்தச் செயல்முறையாலும் முழுமையாக அழிக்க முடியாத அளவுக்குத் தண்ணீர் மாசுபட்டுள்ளது.”
“எனவே சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிப்பது முக்கியம். உங்களால் முடியுமானால் நீங்கள் நிச்சயம் ஒரு நல்ல வடிகட்டியைப் பயன்படுத்தலாம்.”
சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் பருகும் நீர் மாசுபட்டதா என்பதை யூகிக்க முடியும்.
- தண்ணீரின் சுவை எப்படி இருக்கிறது? அது வழக்கத்தைவிட வேறுவிதமான சுவை அல்லது உலோகம் போன்ற சுவையுடன் இருக்கிறதா?
- தண்ணீரின் நிறம் என்ன? அது எவ்வளவு தெளிவாக இருக்கிறது?
- குழாயிலோ, உடைகளிலோ கறைகளை ஏற்படுத்துகின்றனவா?
- அது அழுகிய முட்டை போன்ற ஏதாவது வாசத்துடன் இருக்கிறதா?
இவற்றை ஆராய்வதன் மூலம் தண்ணீரின் தரத்தை அறிந்துகொள்ள முடியும்.
நன்றி பிபிசி தமிழ்