நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ – நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தீர்ப்பு வழங்குவதற்கு சற்று முன்பாக, இந்த பிரச்னைக்குத் தீர்வு அளிக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகத் தான் ஒருபோதும் சொன்னதில்லை என்று முன்னாள் தலைமை நீதிபதி தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் கூறியுள்ளார்.

பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் சாக்கருக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அயோத்தி தீர்ப்பு, 370வது சட்டப்பிரிவு மற்றும் நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.

​​”ராமர் கோவில் விவகாரம் தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு சற்று முன்பாக அதற்கு ஒரு தீர்வு கொடுக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்தீர்களா?,” என்று ஸ்டீபன் சாக்கர் அவரிடம் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த நீதிபதி சந்திரசூட், “இது முற்றிலும் தவறானது. இது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி. எனது கூற்று தவறான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

நீதிபதி டி.ஒய் சந்திரசூட் 2022 நவம்பர் முதல் 2024 நவம்பர் 10ஆம் தேதி வரை இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்ட தலைமை நீதிபதிகளில் ஒருவராக இருந்த நீதிபதி சந்திரசூட்டின் பதவிக் காலத்தில் உச்சநீதிமன்றம் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இதில் சில தீர்ப்புகளுக்காக, குறிப்பாக அரசியல் அழுத்தம் தொடர்பாக அவர் விமர்சிக்கப்பட்டார்.

நீதித்துறை சுதந்திரம்

நரேந்திர மோதி இந்தியாவை ‘ஒரு கட்சி அரசை’ நோக்கித் தள்ளியுள்ளார் என்பதை ஆய்வாளர்கள், ராஜதந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்கின்றன என்றும், அவரது கட்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், எதிரிகளைக் குறிவைக்கவும் நீதிமன்றத்தை நாடுகிறது என்றும் 2023ஆம் ஆண்டில், தி நியூயார்க் டைம்ஸ் எழுதியது..

இந்தக் காலக்கட்டத்தில் அவரும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிட்டதா என்று ஸ்டீபன் சாக்கர் கேட்டபோது ​​நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நியூயார்க் டைம்ஸ் முற்றிலும் தவறான கருத்தை வெளியிட்டுள்ளது. ஏனென்றால் 2024 தேர்தலில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள அது தவறிவிட்டது. 2024 தேர்தல் முடிவுகள் ‘ஒரு கட்சி ஒரு நாடு’ என்ற கட்டுக்கதையை உடைத்துள்ளது.

இந்தியாவின் மாநிலங்களில் பிராந்திய விருப்பங்கள் மற்றும் அடையாளங்கள் முதன்மையானவை. பல மாநிலங்களில் பல்வேறு பிராந்திய கட்சிகள் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்சி செய்து வருகின்றன,” என்று குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என்று பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டில் ஒரு அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயிருக்கும். ஆனால் இந்தத் தண்டனை பின்னர் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது.

ராகுல் காந்தியின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு, இந்தியாவில் நீதித்துறையின் மீது அரசியல் அழுத்தம் இருப்பதைக் காட்டவில்லையா என்று சாக்கர் கேட்டபோது அதற்கு பதிலளித்த டி.ஒய்.சந்திரசூட், “கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 21,300 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்தின் மீதும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சட்டம் தன் கடமையைச் செய்கிறது என்று இதற்கு அர்த்தம்.”

“அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என எல்லா நாட்டிலும் சட்ட நடைமுறை உள்ளது. ஆனால் உயர்நீதிமன்றங்கள் குறிப்பாக உச்சநீதிமன்றம், ‘தனிமனித சுதந்திரம்’ பாதுகாக்கப்படும் என்ற தெளிவான செய்தியை அளித்துள்ளது. பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட விதம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இதற்கும் வழிகள் உள்ளன. ஆனால் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இந்திய உச்சநீதிமன்றம் முன்னிலையில் உள்ளது என்பதே உண்மை,” என்றார்.

நன்றி பிபிசி தமிழ்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 413 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே