1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிறந்தார் அன்னை தெரசா.

இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ.

ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு, அவர் ‘சகோதரி தெரசா’ என அழைக்கப்பட்டார். தனது 19-வது வயதில் 1929 -ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி கொல்கத்தாவில் காலடி எடுத்து வைத்த இவர், 68 ஆண்டுகள் இந்தியாவில் சேவை புரிந்தார்.

1946-ம் ஆண்டு, செப்டம்பர் 10-ம் தேதி ஓய்வுக்காக இந்தியாவின் டார்ஜிலிங் நகருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டபோது, தன்னுடைய வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையும் மாற்றி அமைக்க எண்ணி கன்னிமார்கள் குழுவில் இருந்து விலகினார் அன்னை தெரசா.

ஜாதி, பாலினம், இன, மத மற்றும் கலாசார தடைகளை உடைத்து அனைவருக்கும் உதவினார். 1947-ம் ஆண்டு கொல்கத்தாவின் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான மோட்டிஜிக்கு குடிபெயர்ந்தார். அப்போது அவரிடம் இருந்தது மனம் நிறைய சேவை எண்ணமும், அன்பும், ஐந்து ரூபாய் பணமும் மட்டும்தான்.

1950-ல் ‘மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 1952-ல் ‘நிர்மல் ஹிரிடே’ என்ற இல்லத்தை நிறுவினார். இந்த இல்லம் தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு இறுதிகால கருணை இல்லமாகத் திகழ்ந்தது.

உயிர் ஊசலாடிய நிலையில் கொல்கத்தாவின் தெருக்களில் வாழ்ந்த 42,000 பேர் அந்த இல்லத்தில் அனுமதிக்கப்பட்டனர். சக மக்கள் கவனிக்கத் தவறிய அவர்கள், அன்னையின் அன்பால் அரவணைக்கப்பட்டனர்.

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றார் அன்னை தெரசா. அந்த செல்வந்தர் காரி உமிழ்ந்தார். ‘இந்த எச்சில் எனக்குப் போதும். என் ஏழைகளுக்கு ஏதேனும் தாருங்கள்’ என்றார் அன்னை. இதைக் கேட்டதும் செல்வந்தர் குற்றஉணர்வு கொண்டு, அவர் காலில் விழுந்து அழத் தொடங்கினார். உதவியையும் வாரி வழங்கினார்.

1953-ல் ஓர் ஆதரவற்றோர் இல்லத்தையும், 1957-ல் தொழுநோயாளிகளுக்கான ஓர் இல்லத்தையும் தொடங்கினார் அன்னை தெரசா. தொழுநோயாளர்களை பலர் வெறுத்து நகந்தபோது, அன்னை தெரசாவும் அவரின் சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கு மருந்திட்டு கவனித்துக் கொண்டனர்.

12 கன்னிமார்களைக் கொண்டு தொடங்கிய அவரது ‘மிஷனரி ஆஃப் சேரிட்டி’ அமைப்பு தற்போது 500-க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 133 நாடுகளில் இயங்கி வருகின்றன.

1979 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, 1980-ம் ஆண்டில் இந்தியாவின் பாரத ரத்னா, 1985-ம் ஆண்டு அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம் போன்ற மிகவும் பிரபலமான விருதுகளை பெற்றிருக்கிறார் அன்னை தெரசா.

அன்னை தெரசாவின் இறுதி காலகட்டத்தில் அவரிடம் இருந்த சொத்துகள்… மூன்று வெள்ளை சேலைகள், ஒரு சிலுவை, ஒரு ஜெபமாலை மட்டும்தான். 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5 தனது 87-ம் வயதில் அன்னை தெரசா உயிரிழந்தார்.

அவரது அன்பையும் சேவை மனப்பான்மையையும் பாராட்டும் வகையில் கவிஞர் ஒருவர், ‘சாக்கடையோர சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் அன்னை தெரசா’ என்று வர்ணித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே