வெளிநாட்டில் இருந்து ஒரு படையைக் கொண்டுவந்து, பிரிட்டிஷ் இந்தியாவைத் தாக்கி, நாட்டிலிருந்து ஆங்கிலேயரைத் துரத்திவிட வேண்டும் என்பதே, சுதேசப் பற்றுமிக்க செண்பக ராமனின் திட்டமாக இருந்தது.
முதலாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், 1914 செப்டம்பர் 22 அன்று எஸ்.எம்.எஸ். எம்டன் என்கிற பிரமாண்ட ஜெர்மானியப் போர்க்கப்பல் சென்னை மீது குண்டுகளை வீசிக்கொண்டிருந்தது.
பிறகு கேரளக் கடற் பகுதியில் நங்கூரமிட்ட அந்தக் கப்பல், பிரிட்டிஷ் கப்பல்களைத் தடுத்து சரமாரியாகத் தாக்கியழித்துக்கொண்டிருந்தது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால், விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் இருந்திருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் நம்பினார்கள்.
வெளிநாட்டில் இருந்து ஒரு படையைக் கொண்டுவந்து, பிரிட்டிஷ் இந்தியாவைத் தாக்கி, நாட்டிலிருந்து ஆங்கிலேயரைத் துரத்திவிட வேண்டும் என்பதே, சுதேசப் பற்றுமிக்க செண்பக ராமனின் திட்டமாக இருந்தது.
அந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதான் சென்னை துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் என்று கருதப்படுகிறது. அந்த வீரம் செறிந்த செண்பகராமனின் உருவச் சிலையை 17.7.2008இல் சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி திறந்துவைத்தார்.
யார் இந்த செண்பகராமன்?
திருவனந்தபுரத்தின் தலைமைச் செயலகம் அருகில், இன்றைய ஏ.ஜி.எஸ். அலுவலகம் உள்ள இடத்துக்கு அருகே ஒரு சிறிய வீட்டில், வெங்கிடி என்று அறியப்பட்ட சிறிய குடும்பத்தில் பிறந்தார் செண்பகராமன். அங்கிருந்த மாடல் பள்ளியில் படித்துவந்த சிறுவன் செண்பகராமன், ஆங்கிலேயருக்கு எதிரான முழக்கங்களை வகுப்பிலேயே எழுப்பியவர்.
நாட்டிலேயே முதன்முதலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று அந்தச் சிறுவன் எழுச்சியுடன் கோஷமிட்டதைக் கேட்ட தலைமை ஆசிரியர் மிரண்டுவிட்டார். காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, ஒரு போலீசும் பள்ளிக்கு வந்தார். வந்தவர் வேறு யாருமல்ல; செண்பகராமனின் தந்தை சின்னச்சாமி.
இது செண்பகராமன் பற்றிய நினைவேந்தல் நிகழ்ச்சியில், தமிழக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான குமரி அனந்தன் கூறிய செய்தி.
பிரிட்டன் விஞ்ஞானியான வால்டர் ஸ்ட்ரிக் லேண்ட், வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள திருவனந்தபுரத்தில் அப்போது தங்கியிருந்தார்.
ஒரு பிரபல அறிவியல் இதழில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன் டி.பத்மநாபன் சிலந்திகளின் நிறமாற்றம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
டி.பத்மநாபன் என்கிற அந்த இளம் ஆராய்ச்சியாளனால் ஈர்க்கப்பட்ட வால்டர், அவரை மேல் படிப்பு படிக்க வைக்க இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார். அவருடன், அவருடைய உற்ற நண்பனும், நெருங்கிய உறவினருமான இளைஞன் செண்பகராமனும் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆஸ்திரியாவில் ஒரு கல்லூரியில் சேர்ந்த செண்பகராமன், அங்கு பொறியியல் பட்டயப் படிப்பை முடித்தார். அரசியல் அறிவியலிலும், பொருளாதார அறிவியலிலும் விருதுகள் பெற்றார்.
12 மொழிகளில் புலமை பெற்றிருந்த அவர், ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையங்களில் பொறியாளராகப் பணியாற்றிவந்தார். சுமார் 20 ஆண்டுகாலம் ஜெர்மனியில் வசித்தார் செண்பகராமன்.
செண்பகராமனின் முயற்சிகள்
இந்தியப் பெருங்கடலில் எம்டன் கப்பல் நின்றிருந்த இரண்டாம் மாதத்தில், ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் செண்பகராமன் ஈடுபட்டிருந்தார் என்று சான்றுகள் கூறுகின்றன. ஜெர்மனியில் இருந்தபோது, செண்பகராமன், மற்ற இந்தியப் புரட்சி வீரர்களின் உதவி எம்டன் கப்பலுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.
எம்டன் கப்பலின் முதன்மை அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் வோன் மூக் எழுதிய எம்டன் நினைவுக்குறிப்புகளில் இது குறித்த தெளிவுகள் உண்டு.
முதலாம் உலகப் போரில் நடுநிலை நிலைப்பாட்டுடன் இருந்த சுவிட்சர்லாந்தை மையமாகக்கொண்டு சுதந்திர இந்தியாவுக்கான ஆதரவாளர்கள் சங்கத்தை நிறுவினார் செண்பகராமன். பெர்லினை மையமாகக் கொண்டு ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் ‘புரோ இந்தியா’ என்ற பெயரில் இந்திய விடுதலை ஆதரவு முன்னெடுப்புகளை அவர் தொடங்கினார். கவிக்குயில் சரோஜினிதேவியின் சகோதரரான வீரேந்திரநாத் சட்டோபாத்தியாய (சாட்ரோ) இவருடைய நெருங்கிய கூட்டாளியாக இருந்தார்.
முதலாம் உலகப் போர் காலத்தில் இங்கிலாந்தின் உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு அதிகாரியான ஜோன் வெலிங்கர், தனக்குக் கீழிருந்த ‘ஆர்’ என்பவரின் தலைமையில் இவர்களைக் கொன்றழிக்க சுவிட்சர்லாந்துக்கு உளவாளிகளை அனுப்பியிருந்தார். பிரபல நாவலாசிரியர் சாமர்செட் மாம்தான் ‘ஆர்’ என்கிற அந்த அதிகாரி. பின்னாளில் மாம், இந்தியப் புரட்சிப்படைகளில் இருந்தவர் களின் வாழ்க்கையைத் தழுவி பல கதாபாத்திரங்களையும் படைத்தார்.
பாழான திட்டங்கள்
இதனிடையே உளவுப்படை வருவதை அறிந்த செண்பகராமனும் சாட்ரோவும் பெர்லினுக்கே புறப்பட்டுச் சென்றனர். அங்கு ‘இந்திய சுதந்திர லீக்’ (இன்டியன் இன்டிபென்டன்ஸ் லீக்) அமைப்பின்கீழ் இந்திய வீரர்கள் ஏராளமாகக் கூடினர். ‘செம்பக்’ என்று அழைக்கப்பட்ட செண்பகராமனும், சாட்ரோவும் இணைந்து, ‘சாட்ரோ-செம்பக் பெர்லின் கமிட்டி’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.
பிற புரட்சிப் படையினரும் இவர்களுடன் கைகோத்தனர். பணம், ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு இந்தியக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டும்; பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வேண்டும்; இந்தியாவை, ஜனநாயக, சோசலிச அரசமைப்பு கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்பதே இந்தக் கமிட்டியின் திட்டம்.
1914இல் ஜூலை 31-ஆம் தேதி ஐ.என்.வி. எனப்படும் ‘இந்தியன் நேஷனல் வாலன்டரி கார்ப்ஸ்’ எனப்படும் இந்திய தேசிய தன்னார்வப் படை உருவாக்கப்பட்டது. பெர்லினில் அந்தப் படையினருக்குச் செண்பகராமன் எழுச்சி உரை ஆற்றினார். இந்தியர்களுடன் வெளி நாட்டவரையும் உள்நாட்டவரையும் உணர்வூட்டி ஒன்றுசேர்க்க விரும்பிய அவர், அங்கிருந்த முஸ்லிம்களையும், சீக்கியர்களையும் ஒவ்வொருவராக சந்தித்துப் பேசினார்.
இதன் காரணமாகவே அடுத்த சில மாதங்களுக்குள் நிகழ்த்தப்பட்ட எம்டன் கப்பல் தாக்குதலில் செண்பகராமனின் ‘கைகள்’ இருந்தன என்ற சந்தேகம் உறுதிப் படுத்தப்பட்டது. ஆனால், முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து செண்பகராமனின் அத்தனை திட்டங்களும் பாழாயின.
இவை நடந்து முடிந்த பின்பு ஒரு ஜெர்மானிய நிறுவனத்தில் பொறியாளராகத் தற்காலிகப் பணியில் சேர்ந்த செண்பகராமன், இந்திய விடுதலைக்காகத் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தார். 1930இல் இந்தியன் சேம்பர் ஆப் காம்ர்ஸின் (இந்திய வர்த்தக சபை) பெர்லின் பிரதிநிதியாகத் தேர்வானார். நாஸிகளுக்குத் துணையாக நின்ற தேசிய மக்கள் கட்சியில் (நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி) ஐரோப்பியர் அல்லாத ஒரே அயல்நாட்டுக்காரரும் அவரே.
ஹிட்லருடன் மோதல்
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஆரம்பத்தில் செண்பகராமன் நல்ல நட்புடன் இருந்தார். ஆனால் ‘ஆரிய வம்சத்தாரல்லாத இந்தியர்களை, பிரிட்டிஷார் ஆட்சி செய்கிறார்கள் என்றால், அது இந்தியர்களின் தலைவிதி’ என்கிற ஹிட்லரின் கூற்றைக் கேட்டு தேசப்பற்றாளனான செண்பகராமன் வேதனை கொண்டார் (1931 அக்டோபர் 10ஆம் தேதி, ஹிட்லரின் இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது). அந்த நாள்களில் ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியாக வளந்திராத நேரம்.
இதனைத் தொடர்ந்து ஹிட்லருக்குச் செண்பகராமன் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “திருவாளர் ஹிட்லர், நீங்கள் ரத்தத்தைவிட சிவப்பான தோலுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்; எங்கள் தோல் கறுத்ததாக இருக்கலாம்; ஆனால் எங்கள் இதயங்கள் கறுப்பானவைகளல்ல” எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பிறகு ஹிட்லரின் எதிர் நடவடிக்கைகளால் இருவருக்குமான தொடர்பில் பெரும்பிளவு ஏற்பட்டது. 1933 ஜனவரியில் ஜெர்மனியின் சான்ஸிலரானார் (அதிபர்) ஹிட்லர். ஜூன் மாதத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒழித்துக்கட்டி சர்வாதிகார சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
பின்னர் நாஸிகளின் அட்டூழியம் தொடங்கியது. பெர்லினில் குடியிருந்த செண்பகராமனின் வீட்டுக்குள் புகுந்த அவர்கள், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கி, வெளியே இழுத்து வீசிவிட்டுச் சென்றனர். படுகாயம் அடைந்த செண்பகராமன் சிகிச்சைக்காக இத்தாலி சென்றார்.
அவரது தலையில் ரத்தம் உறைந்து கட்டி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பணம் இல்லாததால் செண்பகராமனால் உயர்சிகிச்சையைப் பெற முடியவில்லை. ஒரு சாதாரண மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செண்பகராமன், 1934 மே 28 அன்று மரணத்தை தழுவினார்.
ஹிட்லருக்கு எதிராக ஒருவரும் நாவைக்கூட அசைக்க முடியாதிருந்த அந்தச் சூழலில், சொந்த நாட்டுக்காகத் தனது கணவர் ஹிட்லரை எதிர்த்து நின்றார் என்றும், இதனால் வேதனையைப் பெற்ற அவர், இடிந்துபோன மனிதனாக உயிரிழந்தார் என்றும் அவருடைய மனைவி லக்ஷ்மி பாய் பின்னாளில் வேதனையுடன் பதிவுசெய்துள்ளார்.