பிஎம் கேர்ஸ் நிதிக்காக பெரு நிறுவனங்களிடம் இருந்து பெற்ற பணம் எங்கே போனது? யாருக்காவது தெரியுமா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி காய்களை நகர்த்தி வருகிறார்.

அதேசமயம், முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி, பிரச்சாரத்தைப் பலப்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை இப்போதே தொடங்கிவிட்டனர். 

இன்னும் 5 மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

ஒவ்வொரு கட்சித் தலைவரும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மேற்கு வங்க அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் மம்தா பானர்ஜி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”மத்தியில் ஆளும் பாஜகவின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் சொல்வதைப் போல் மேற்கு வங்கத்தில் ஆளும் என்னுடைய தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு பணியாற்றாது.

நான் கேட்கிறேன். பிஎம் கேர்ஸ் நிதி மூலம் திரட்டப்பட்ட நிதி எங்கே போனது? யாருக்காவது, பிஎம் கேர்ஸ் நிதி எங்கே போனது எனத் தெரியுமா? லட்சக்கணக்கான கோடி மதிப்பிலான பணம் எங்கே போனது? எதற்காக எந்த விதமான தணிக்கையையும் பிஎம் கேர்ஸ் அமைப்பில் செய்யவில்லை.

கரோனா வைரஸை எதிர்த்து நாம் போராட பிஎம் கேர்ஸ் அமைப்பு நமக்கு என்ன கொடுத்திருக்கிறது?

எங்கள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றி மத்திய அரசு குறை கூறுகிறது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் எங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே இருக்கிறது.

மத்திய விசாரணை அமைப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறையை மத்திய அரசு சிதைத்து வருகிறது. இதற்கெல்லாம் நான் அச்சப்பட மாட்டேன். பாஜக அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை”.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே