சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் திட்டமிட்டு கொல்லப்பட்டது எப்படி?

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூரில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இந்திய துணை ராணுவ படையினரை இலக்கு வைத்து ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 22 படையினர் உயிரிழந்த சம்பவத்தில், அத்தகைய குழுவினரை கையாள அரசு கடைப்பிடிக்கும் உத்திகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, மக்கள் விடுதலை கொரில்லா படை என தங்களை அழைத்துக் கொள்ளும் மாவோயிஸ்டுகளின் தலைவர் ஹித்மா, காட்டில் இருப்பதாக ஒரு தகவலை துணை ராணுவப் படையினருக்குப் பரப்பி பெருமளவிலான படையினரை அங்கு வரவழைத்து, அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு எப்படி முடிந்தது என்ற கேள்வி பாதுகாப்பு படையினர் இடையே மேலோங்கியிருக்கிறது.

சம்பவ இடத்தில் துணை ராணுவப்படையினர் சுற்றி வளைக்கப்பட்ட இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு நடந்ததா? காட்டைச் சுற்றி கண்காணிப்பில் படையினர் 2,000 பேர் இருக்க அவர்களால், சில நூறு மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள கிராமங்களில் இந்திய தேசிய மூவர்ண கொடியை துணை ராணுவத்தினர் பறக்க விட்டதால், அதற்கு பதிலடியாக படையினரை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்களா?

துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டுகளுக்கு காயம் அடைந்து அதில் தங்களுடைய சகாக்களுடன் அவர்கள் டிரக்குகளில் தப்பிச் சென்றார்களா? அது நடக்கும்போது மற்ற வீரர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் போன்ற பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுகின்றன.

அரசின் நிர்வாக மட்டத்திலும், துணை ராணுவப்படைகளின் கள நிலைமையை அறிந்தவர்களிடையேயும் பேசியபோது, இந்த கேள்விகளுக்கு வெவ்வேறு பதில்கள் கூறப்பட்டாலும் உண்மையில் களத்தில் நடந்த உண்மை என்ன என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியாத நிலை அங்கு நிலவுகிறது.

மாவோயிஸ்டு பிராந்தியம்

சத்தீஸ்கரின் மூலையில் இருக்கும் இரண்டு முக்கிய மாவட்டங்கள் பிஜாபூர் மற்றும் சுக்மா. இவை சம்பவம் நடந்த தெக்லகுடம் கிராமத்துக்கு வெளிப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கு காவல்துறையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சனிக்கிழமை பிற்பகலில மணிக் கணக்கில் துப்பாக்கி சூடு நடந்ததாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அடிப்படையில் இந்த இடம் மாவோயிஸ்டுகளின் கோட்டை போல கருதப்படுகிறது. இங்குதான் தங்களின் முதலாவது படையணி போன்ற ஆயுதக்குழுவை மாத்வி ஹித்மா என்ற மாவோயிஸ்டு தலைவர் நிறுவியிருக்கிறார். இங்கு நுழையும் எவரையும் சுற்றி வளைத்து தாக்கும் வகையில் தாக்குதல் உத்திகளை கச்சிதமாக வகுப்பதில் இங்குள்ள ஆயுதக்குழுவினர் கைதேர்ந்தவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஹித்மாவின் கிராமம் புவார்தி. இந்த நபர் 1990களில் மாவோயிஸ்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். இவருக்கு மாத்வி ஹித்மா, சந்தோஷ், இந்துமுல், போதியம் பீம, மணிஷ் போன்ற பெயர்களும் உள்ளூரில் உள்ளன.

2010ஆம் ஆண்டில் தண்மெட்லா பகுதியில் இந்திய துணை ராணுவத்தினர் 76 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய நபராக ஹித்மா கருதப்படுகிறார். அந்த சம்பவத்துக்கு பிறகு அவரது தலைக்கு ரூ. 35 லட்சம் வெகுமதி தரப்படும் என அரசு அறிவித்தது.

அப்போது முதல் தலைமறைவாக வாழ்ந்து வரும் மாத்வி ஹித்மாவுக்கு சத்தீஸ்கரின் அடர்த்தியான எல்லை காடுகள்தான் வாழ்விடம். 2010க்கு பிறகு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஹித்மா கொல்லப்பட்டதாக தகவல்கள் உலா வந்ததாக ஒரு காவல்துறை அதிகாரி கூறுகிறார்.

ஹித்மா என்பது பெயர் அல்ல. அது ஓர் அடையாளம் என இங்குள்ள மாவோயிஸ்டுகள் அழைக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் ஹித்மா உயிருடன் இருப்பதாக வலுவான உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து, மாநில அதிரடிப்படை, மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா படை, கோப்ரா படையணி, மாவட்ட ஆயுதப்படையினர் ஹித்மா மறைந்திருப்பதாக கூறப்படும் காட்டுப்பகுதிக்கு புறப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து குண்டாம், அலிகுடாம், தெக்லகுடம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், ஒரு மாவோயிஸ்டை கூட அவர்களால் பிடிக்க முடியவில்லை. இந்த தேடுதலில் ஈடுபட்ட ஒரு வீரர் பிபிசியிடம் பேசுகையில், “முதல் முறையாக நாங்கள் மாவோயிஸ்டுகளின் நேரடி கோட்டைக்குள் கால் வைத்தோம். ஜக்ரகுண்டா டார்ரெம் பகுதி, சத்தீஸ்கர் தனி மாநிலமான பிறகு வெளியாட்கள் நுழைய முடியாத இடமாக மாறியது. எப்படி உள்ளே சென்றோமோ அதே வழியாகவே நாங்கள் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஆனால், திடீரென எங்களை மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள்,” என்று கூறினார்.

இதற்கிடையே, களத்தில் நாம் விசாரித்த தகவல்களின்படி இப்படியொரு இடத்தில் துணை ராணுவப்படையினர் வருவார்கள், அவர்கள் திரும்பிச் செல்லும்போது இப்படித்தான் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்தவர்களாக மாவோயிஸ்டுகள் செயல்பட்டிருப்பதை உணர முடிந்தது. காரணம், படையினர் கிராமம், கிராமமாக சென்றபோது பல வீடுகளில் தாழ்பாள் போடாமல் கதவுகள் திறக்கப்பட்டே கிடந்தன. உள்ளே ஒருவர் கூட கிடையாது. இவ்வாறு தேடுதலில் ஒருவர் கூட சிக்காத நிலையில், எல்லா படையினரும் திரும்பி விட்டு கடைசி படையினர் இருந்த பேருந்து சென்றபோது அதை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் சுற்றி வளைத்தனர்.

பிறகு அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தத் தொடங்கியபோது, உயிரை காப்பாற்றிக் கொள்ள பல வீரர்கள், அருகே இருந்த காட்டு வழியாக ஓடி சாலையை அடைந்தனர். சிலர், காடுகளில் மரங்களுக்கு இடையே தஞ்சம் அடைந்தனர். ஆனால் எங்கெல்லாம் படையினர் வருவார்கள், எங்கு அவர்கள் பதுங்குவார்கள் என்பதை முன்பே அறிந்தவர்கள் போல மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினார்கள்.

பகல் 12 மணிககு தொடங்கிய தாக்குதல் பிற்பகல் 3.30 மணிவரை நடந்தது. ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்து அருகே உள்ள மலைப்பகுதியை வீரர்கள் அடைந்தபோது, அங்கு ஏற்கெனவே தயாராக நின்றிருந்த மாவோயிஸ்டுகள், நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், மோர்டார் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

படையினரை ஓர் இடத்துக்கு வரவழைத்து ஆங்கில எழுத்தில் ‘வி’ வடிவில் இருப்பது போல சுற்றி வளைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதால் படையினர் தப்பிக்க முடியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் சில படையினர் சம்பவ பகுதியில் வீரர்களின் சடலங்களை சுற்றி வளைக்க முற்பட்டபோது அங்கு அவர்கள் பார்த்த காட்சி அதிர்ச்சியடைய வைத்தது.

இது பற்றி உள்ளூர் கிராமவாசி பிபிசியிடம் விவரிக்கையில், “எந்தவொரு வீடும் தாழிடப்படவில்லை. வீரர்களின் சடலங்கள் கிராம வீதிகளில் ஆங்காஙகே கிடந்தன. ஒரு வீரரின் சடலம் ஒரு வீட்டின் கதவருகே கிடந்தது. ஒவ்வொரு சடலத்தையும் கயிறு கட்டி இழுத்து நகர்த்திப் பார்த்த பிறகே அதனருகே வீரர்கள் சென்றனர். காரணம் அந்த சடலத்தில் கூட வெடிகுண்டுகள் கட்டியிருப்பார்களோ என மற்ற வீரர்கள சந்தேகப்பட்டனர்,” என்று கூறினார்.

சம்பவ பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள், ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்துக்கு வேறு படையினர் உடல்களை மீட்டுச் செல்ல வரும்வரை இருந்துள்ளனர். ஒவ்வொரு சடலத்திலும் கிடந்த செல்போன்கள், ஷூக்கள், பெல்ட்கள், இதர உபகரணங்களை அவர்கள் கொண்டு சென்றனர். சம்பவ பகுதிக்கு படையினர் செல்லும் முன்பே ஊடகக்குழுவினர் சென்றபோது அவர்களை ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்திய பிறகே அனுமதித்தனர்.

உடல்களை மீட்க வந்த குழுவினரையும் இலக்கு வைக்க மாவோயிஸ்டுகள் தீர்மானித்திருந்தனர். அவ்வாறுதான் மீட்புக்குழு வீரர் ஒருவர் ஐஇடி குண்டு வெடித்ததில் காயம் அடைந்தார்.

இந்திய அரசின் நிலைப்பாட்டை சுக்கு நூறாக்கிய சம்பவம்

இதுவரை அந்த இடத்தில் அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவோயிஸ்டுகள் பலவீனம் அடைந்து விட்டனர் என்று மாநில அரசு கூறி வந்தது. மாநில முதல்வர் பூபேஷ் பாகெல், மாவோயிஸ்டுகளின் இருப்பிடம் குறிப்பிட்ட எல்லைக்குள்ளாக சுருங்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார். ஆனால், இதுபோன்ற கூற்றுகளை பொய்யாக்கும் வகையில் சனிக்கிழமை சம்பவம் அமைந்திருக்கிறது.

கடந்த மார்ச் 26ஆம் தேதி, புத்தாராம் காஷ்யாப் என்ற பிஜாபூரை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரை மாவோயிஸ்டுகள் கொன்றனர். கொண்டகான் மாவட்டத்தில் நடந்த சாலை கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களை அவர்கள் தீக்கிரையாக்கினர்.

அதற்கு முன்பாக மார்ச் 23ஆம் தேதி, பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்தை வெடி வைத்து தகர்த்த சம்பவத்தில் ஐந்து வீரர்கள் பலியாகினர்.

மார்ச் 20ஆம் தேதி தண்டேவாடா பகுதியில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஆனால், அதே நாள் சன்னு போனெம் என்ற காவலரை மாவோயிஸ்டுகள் கொன்றனர்.

மார்ச் 13ஆம் தேதி, சுனில் பாதெம் என்ற மாவோயிஸ்ட், பிஜாபூரில் ஓர் ஐஇடி வெடித்ததில் உயிரிழந்தார். அதற்கு முன்பு மார்ச் 5ஆம் தேதி, நாராயண்பூர் என்ற இடத்தில் ஐஇடி வெடித்ததில் ராம்தீர் மங்கேஷ் என்ற இந்திய – திபெத்திய காவல் படை ஜவான் உயிரிழந்தார்.

மார்ச் 4ஆம் தேதி, சத்தீஸ்கர் ஆயுதப்படையை சேர்ந்த தலைமைக் காவலர் லக்ஷமிகாந்த் துவிவேதி, மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் குழு வைத்த ஐஇடியில் சிக்கி உயிரிழந்தார்.

இது குறித்து மாநில உள்துறை முன்னாள் செயலாளர் பி.கே.எஸ். ரே கூறுகையில், “மாவோயிஸ்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல் நடத்துகிறார்கள். இதைப் பார்க்கும்போது அவர்கள் எங்கும் பலவீனம் அடையவில்லை என தெரிகிறது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக பிரத்யேகமாக அரசிடம் கொள்கை கிடையாது. ஒவ்வொரு முறை மாவோயிஸ்டு சம்பவம் நடக்கும்போதும், உயிரிழந்த வீரரின் இழப்பு வீண் போகாது என்று அரசு அறிக்கை வெளியிடும். ஆனால், அதற்கான சரியான நடவடிக்கையை அரசு எடுக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. கொள்கை என ஒன்று இருந்தால்தானே அதை அமல்படுத்த அரசால் முடியும்,” என்று தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018இல் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 22ஆவது பிரிவில், நக்சலைட் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்படும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. மேலும், நக்சல்வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

காயமடைந்த இந்திய படையினரை மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து, 15 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க முடியாத காங்கிரஸ் கட்சி, சத்தீஸ்கரில் ஆட்சிக்கு வந்து பூபேஷ் பாகெல் முதல்வரானார். அவர் பதவியேற்ற அதே ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி இரவு, மாநில அரசின் தலைமைச் செயலாளர் எழுதிய மக்கள் செயல்திட்டம் காகித வடிவில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன.

பூபேஷ் பாகெலின் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் நடந்தபோது அதில் ஜிராம் பள்ளத்தாக்கு சம்பவம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்படும் முடிவு எடுக்கப்பட்டது.

ஜிராம் பள்ளத்தாக்கு சம்பவம் என்பது பஸ்தார் பகுதியில் 2013ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட 29 பேர் கொல்லப்பட்ட சம்பவமாகும். அதுதான் மாவோயிஸ்டுகளின் வரலாறிலேயே நிகழ்த்தப்பட்ட அரசியல் தலைவர்களை இலக்கு வைத்த மிகப்பெரிய தாக்குதலாக அறியப்படுகிறது.

அந்த ஜிராம் பள்ளத்தாக்கு சம்பவம் தொடர்பான வழக்கின் பேரால் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்க, பூபேஷ் பாகெல் அரசு வழங்கிய மாவோயிஸ்டு பிரச்னைக்கான தீர்வுக்கான திட்டமும கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அந்த திட்டம் எப்படி இருக்கும், அதன் உத்தி என்ன போன்ற எதையும் கடந்த இரண்டரை வருட ஆட்சியில் பூபேஷ் பாகெல் தெளிவுபடுத்தவில்லை. இது பற்றி கேட்கும்போதெல்லாம், நான் மாவோயிஸ்டுகளுக்காக எப்போதும் பேசியதில்லை. அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே பேசினேன் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளரான ஷைலேஷ் நிதின் திரிவேதி, “பாரதிய ஜனதா கட்சி தலைமையில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்த ஆட்சியில் மாநிலம் பின்னோக்கி சென்று விட்டது. இப்போதும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நமது வீரர்கள் மோதி வருகிறார்கள். பஸ்தாரில் வேலைவாய்ப்பின்மையை போக்க அரசு முயன்று வருகிறது,” என்று தெரிவித்தார்.

“இந்திய சிறு காடுகள் உற்பத்தியில் 75 சதவீத பொருட்கள் சத்தீஸ்கர் காடுகளில் இருந்தே கிடைக்கிறது. அதன் ஆதாரமாக விளங்கும் பழங்குடிகளின் நலனுக்காக அரசு மிக நெருக்கமாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எங்களுடைய கருத்தைக் கேட்டால், வளர்ச்சியை எட்டுவதன் மூலமே மாவோயிஸத்தை ஒழிக்க முடியும். அதுதான் எங்களின் நக்சல்வாத ஒழிப்புக் கொள்கை,” என்று கூறுகிறார் ஷைலேஷ் துவிவேதி.

அமைதியே காணாத சத்தீஸ்கர்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் மாவோவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் பின்னணி, 40 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறை கொண்டது.

அந்த மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் இதுநாள்வரை 3,200க்கும் மேற்பட்ட என்கவுன்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. உள்துறை அமைச்சக அறிக்கையின்படி, 1002 மாவோயிஸ்டுகளும், 1,234 பாதுகாப்பு படையினரும் 2001ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019ஆம் ஆண்டு மே மாதம் வரை மாவோயிஸ்டு தொடர்புடைய வன்முறை சம்பவங்களால் உயிரிழந்துள்ளனர். 3,896 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர்.

2020-21ஆம் ஆண்டு நிலவரத்தை பார்த்தால், போலீஸ் என்கவுன்டரில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 270 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர். மாவோயிஸ்டு என்கவுன்டருக்கும் சரண்டர் ஆகும் மரபுக்கும் இடையேதான் அமைதிப்பேச்சுவார்த்தை என்ற ஒரு விஷயம் மெல்லிய கோடு போல அவ்வப்போது நடந்து வருகிறது.

ஆனால், அவ்வாறு நடத்தப்படும் பேச்சுவார்த்தை, தீர்வை நோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கவில்லை. கடந்த மாதம் கூட மாவோயிஸ்டுகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பஸ்தர் பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர் விலக்கிக் கொண்டு தங்களின் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மாவோவாதிகள் குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், முதலில் ஆயுதங்களை கீழே போடுங்கள், இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை தொடராது என்பதில் அரசு தரப்பு உறுதிகாட்டியது. ஆனால், அந்த முடிவை எடுக்க மாவோயிஸ்டுகள் தயாராக இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளைப் பெற மாநில உள்துறை அமைச்சர் தம்ராத்வாஜ் சாது, காவல்துறை இயக்குநர் டி.எம். அவஸ்தியை தொடர்பு கொள்ள முற்பட்டோம். ஆனால், அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து பதிலில்லை.

இதேவேளை, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங், நடக்கும் தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கத்தை நேரடியாக குற்றம்சாட்டுகிறார். ரோம் நகர் பற்றி எரியும்போது ஃபிடில் வாசித்தது போல, இங்கே சொந்த மாநிலத்தில் பிரச்னைகள் ஏராளமாக உள்ளபோது, மாநில முதல்வர் அசாம் தேர்தலில் மும்முரமாக இருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

இங்குள்ள அரசியல் உலகில் எழும் பல கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் மாவோயிச வன்முறையே அந்த கேள்விகளுக்கு முன்னால் நிற்கிறது. விடைதான் கிடைத்தபாடில்லை.

நன்றி : பிபிசி தமிழ்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே