மத்திய பிரதேசத்தில் 540 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறைகள் எங்கே?

மத்திய பிரதேசத்தில் 540 கோடி மதிப்பில் கட்டப்பட்டதாக கூறப்படும் கழிப்பறைகள், உண்மையில் கட்டப்படவே இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கழிவறைகள் இல்லாத 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்காக மத்திய அரசு 540 கோடி ரூபாய் நிதி வழங்கியதை அடுத்து, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

2012 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இதற்கான புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்ததுடன், பயனாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கட்டப்பட்ட கழிவறைகளை பார்வையிடுவதற்காக வந்த அரசு உயர் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கழிவறைகளை கட்டியதாக கணக்கு காட்டி, கட்டப்படாத கழிவறைக்கு செலவு செய்யப்பட்டதாக பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, அந்த பணத்தை வேறுபயன்பாட்டுக்குச் செலவழிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. 

சில பழங்குடியின கிராம மக்கள், இதுதொடர்பாக கேள்வியெழுப்பியதை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக லக்காட்ஜம் பஞ்சாயத்தில் எழுந்த புகாரை அடுத்து அடுத்தடுத்து புகார் எழுந்ததால், விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 7 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

கழிவறைகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதா என தெரிந்துகொள்ள இரண்டாயிரம் தன்னார்வலர்களை வைத்து சோதனை நடத்திய போதுதான் இந்த விவரமே தெரியவந்ததாக தூய்மை இந்தியா திட்டத்தின் மத்தியப்பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி கூறியுள்ளார்.

மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசுகள் கொண்டு வந்தாலும், நேர்மையற்ற அதிகாரிகளால் ஊழலும், மோசடியும் நடப்பதற்கு வழிவகுத்து விடுவதால், இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *