தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? அரசின் உத்தரவு இதுதான்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உடல்ரீதியான பாதிப்புகளைத் தாண்டி தொழிற்துறையை பெரிதும் முடக்கி போட்டுள்ளது. அதில் சினிமா துறையும் ஒன்று. வர்த்தக நடவடிக்கைகளுக்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருட்கள் விற்பனை ஓரளவு சூடுபிடித்துள்ளது. இருப்பினும் ஊரடங்கிற்கு முன்பிருந்த சூழல் இல்லை. பலரும் கடனில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு கூட்டம் அலைமோதும்.

தியேட்டர்கள் நிரம்பி வழியும். தயாரிப்பாளர்களுக்கு பண மழை கொட்டும். சிறிய படங்களாக இருந்தாலும் ஓரளவு மக்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும்.

இதனால் தியேட்டர் முதலாளிகள் ஓரளவு வருமானம் ஈட்டி வந்தனர். தற்போதைய கொரோனா முடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அதனைச் சார்ந்து வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலருக்கும் சம்பளம் கொடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களாக சினிமா துறை முடங்கியுள்ளது.

இதன் காரணமாக ஏராளமான தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறக்கப்படாததால் புதிய திரைப்படங்கள் ஓடிடி தொழில்நுட்ப வசதியுடன் ஆன்லைனில் ரிலீஸ் ஆகி வருகின்றன. இந்நிலையில் UNLOCK 4 தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, தியேட்டர்கள் திறக்க வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அனுமதி இல்லை.

அதேசமயம் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறந்தவெளி தியேட்டர்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படும். சினிமா ஹால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவற்றிற்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழகத்திற்கும் பொருந்தும். இந்நிலையில் பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ், கார்னிவல் போன்ற நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் திறந்தவெளி திரையரங்குகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே நடப்பாண்டின் இறுதி அல்லது 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏராளமான திறந்தவெளி திரையரங்குகள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. இதன்மூலம் தங்கள் இழப்பை சரிசெய்ய மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனையின் பேரில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே