சென்னை: திமுக கூட்டணிக்கு வருமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இருபெரும் அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல். அதிமுக, திமுக… இந்த கட்சிகளில் யார் தலைமைக்கு அரியணை கிடைக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
பெரிய கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க, மற்ற கட்சிகளும் தேர்தலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு களம் காண உள்ளன. அரசியல் நிலவரம் இப்படி இருக்க, ஒரு பக்கம் ரஜினிகாந்த் தேர்தலில் பங்கேற்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பை அவர் எப்போது கொடுத்துவிட்டார். கமல் ஏற்கனவே வந்துவிட்டார்.
இந்த சட்டசபை தேர்தலில் கமல், ரஜினி தனி அணியாக இணைந்து போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காங்கிரசானது, திமுக கூட்டணியில் இருப்பதால் அவர் திமுக கூட்டணிக்கு வாருங்கள் என்று கமல், ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் திமுகவுக்கு எதிராக இருவரும் கச்சிதமாக அரசியல் செய்து வருகின்றனர்.
இந்த தருணத்தில் இருவரும் திமுகவில் இணைவார்களா என்று தெரிய வில்லை. அவர்கள் ஒப்புக்கொண்டால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.