திமுக, அதிமுக ஆட்சியில் என்ன மாற்றத்தை கண்டீர்கள்? – ஆரணியில் விஜய பிரபாகரன் ஆவேசம்

திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் என்ன மாற்றத்தை கண்டீர்கள்? என ஆரணியில் விஜயபிரபாகரன் ஆவேசமாக தெரிவித்தார்.

தி.மலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று ஆரணியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் 2 கட்சிகளும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டை சொல்கிறது. மக்களை பற்றி பேசுவதில்லை. இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு ஏன் வழிவிடுகிறீர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களுக்கு என்ன துரோகம் செய்தார். அப்புறம் ஏன்? அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்கள். எனவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கரோனா காலத்தில் கொடுக்காத இலவசங்களை, தேர்தல் காலத்தில் கொடுப்பது ஏன்?. மக்கள்தான் சிந்திக்க வேண்டும். வாஷிங் மிஷின் தருவதாக சொல்கிறார்கள். உடுத்த துணி இல்லை. தண்ணீர் இல்லை. வாஷிங் மிஷின் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு ஏழை வீட்டிலும், மின் கட்டணம் கடுமையாக உயரும்.

திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் என்ன மாற்றத்தை கண்டீர்கள். நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் ஆசைப்பட்டு வாக்கை விற்பனை செய்தால், கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

எய்ம்ஸ் மருத்துவமனை கல்லை காட்டிய உதயநிதி ஸ்டாலின், கச்சத்தீவு சென்று ஒரு பிடி மண்ணை கொண்டு வந்து காட்ட முடியுமா?. ஒரு விரலை நீட்டி பேசும்போது, மற்ற 3 விரல்கள், உங்களை நோக்கி காட்டுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த விஜயகாந்த்தை ஒழித்துக்கட்டி விட்டீர்கள். அதேபோல் என்னையும் ஒழித்து கட்டிவிடாதீர்கள். இளைஞராக உள்ள என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு உழைக்க நான் தயாராக உள்ளேன். ஒரே ஒருமுறை தேமுதிகவுக்கு வாய்ப்புக் கொடுங்கள்.

ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. வேலை வாய்ப்பு இல்லாததால், வெளி மாவட்டங்களுக்கு குடும்பம் குடும்பமாக சொந்த ஊரைவிட்டு, மக்கள் வெளியேறுகின்றனர். ஆரணியில் பேருந்து நிலையம் கட்டிக் கொடுக்கவில்லை. நகராட்சியின் கடைகளுக்கு அதிக வாடகை வசூலிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைத்து தரப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

ஆட்சியில் இருக்கும்போது, வேலூர் மாவட்டத்தை பிரித்ததை போன்று, திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்காதது ஏன்?. கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் அழுதபோது, உங்களது கண்களுக்கு தெரியவில்லை. ஆனால், நீங்கள் அழும்போது மக்களின் கண்களுக்கும் தெரியாது. எதற்காக மக்கள் மத்தியில் நாடகம் ஆடுகிறீர்கள். உங்களது நாடகத்தால், மக்கள் வீழ்ந்தது போதும்.

சிறுபான்மையினரின் தோழன் என திமுகவினர் கூறிக் கொள்கின்றனர். ஆனால், சிறுபான்மையின ருக்கு உற்ற தோழனாக விஜயகாந்த்உள்ளார். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் விஜயகாந்த். கடந்த 2014 மற்றும் 2019-ல் நடைபெற்ற தேர்தலில், மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்ற காரணத்தால், தமிழகத்தில் நல்லதுநடக்க வேண்டும் என்பதற்காக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. 2014, 2019-ல் நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் என்ன நன்மை செய்தார்கள்.

விஜயகாந்த் தனது சொந்த செலவில், விருத்தாசலத்தில் வளர்ச்சிக்கு உதவினார். அதேபோல் பாஸ்கரனை வெற்றி பெற வைத்தால், எம்எல்ஏ நிதி மற்றும் ஊதியம் முழுவதும் ஆரணி மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்ற எனது தந்தை விஜயகாந்தின் கனவை நனவாக்க வந்துள்ளேன். திமுக, அதிமுக வேண்டாம். ஒரு முறை முரசுக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே