குடியுரிமை சட்டத்திருத்த மசோதாக்களின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

பெரும் எதிர்ப்புக்கிடையே இன்று தாக்கலாகவுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

1955ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து தஞ்சம் புகுந்த இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க மசோதா வழிவகை செய்கிறது.

எனினும் முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படாததால் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்துக்கு எதிரானது என எதிர்ப்பு எழுந்துள்ளது.

தற்போது அமலில் உள்ள சட்டப்படி பெற்றோரின் பிறப்புச் சான்று போன்றவை இருந்தால் மட்டும் வாரிசுகளுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

புதிய மசோதாவில், உரிய ஆவணங்கள் இல்லாவிடினும் ஆறு ஆண்டுகள் கழித்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

தற்போதைய சட்டத்தில் இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லது குறைந்தபட்சம் 11 ஆண்டு வசித்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை தரப்படுகிறது.

புதிய மசோதாவில் 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி்க்கு முன் இந்தியாவில் இருந்திருந்தாலே போதுமானது.

புதிய மசோதாவின் மூலம் முஸ்லீம் அல்லாத பல லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும்.

வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறிய பல லட்சம் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கிடைக்காது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவோ சிறை செல்லவோ நேரிடும்.

அசாமில் நடந்த தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பில் 1971ம் ஆண்டு வரை தஞ்சம் புகுந்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் புதிய மசோதாவில் 2014 ஆக அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் நீக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 6 லட்சம் இந்துக்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்பதால் அசாமில் பலர் எதிர்க்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே