கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், நேற்று சென்னை காவல்துறைக்கு உட்பட்ட டாஸ்மாக்குகள் தவிர மற்ற அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன.
அதனால் காலை முதலே குடிமகன்கள் வரிசையில் நின்று, கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்றி மது வாங்கிச் சென்றனர்.
40 நாட்களாக மது இல்லாமல் தவித்து வந்த குடிமகன்களுக்கு நேற்று ஒரே கொண்டாட்டம் தான்.
இந்நிலையில் மதுக்கடைகள் திறந்ததால் தமிழகம் முழுவதும் என்னென்ன நடந்தது என்பதை ஒரு செய்தி குறிப்பாக பார்க்கலாம்.
1. திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவருக்கு கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது.
2. மதுரை அலங்காநல்லூரில் மதுபோதையில் இருந்த கணவன் குடித்து விட்டு மனைவி மற்றும் மகளை அடித்திருக்கிறார். அதனால் விரக்தி அடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
3. திருச்சுழி அருகே அண்ணன் குடித்து விட்டு, தங்கையிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர், அந்த சண்டை முற்றியதில் அண்ணனே தங்கையை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
4. ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள் புரம் என்னும் பகுதியில் குடிபோதையில் தகராறு செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அய்யா கோவில் தெருவில் வசித்து வரும் ராஜன் என்பவர், சொத்தை எழுதி தராததால் தனது தாயை கொலை செய்துள்ளார்.
6. திருச்சி துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் வசித்து வரும் இரண்டு கும்பலுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் மண்டை உடைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7. திருச்சியில் 43 நாட்களாக மது அருந்தாமல் இருந்த நபர், நேற்று மது அருந்தியதால் கடை வாசலிலேயே உயிரிழந்துள்ளார்.
8. காரைக்குடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியையும் தம்பி மனைவியையும் அரிவாளால் அண்ணன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
9. மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் இரண்டு மதுபான கடைகளுக்கு தீ வைத்ததால், பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
10. ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் திறந்தால் அடித்து நொறுக்குவோம் என கூறி டாஸ்மாக் கடையை பெண்கள் மூட வைத்துள்ளனர்.