கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குக் கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும் நோய் அறிகுறிகள் கண்டறியும் ஆய்வுக் கூடமும் மருத்துவமனையில் உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றிய 5 செவிலியர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாகச் செவிலியர் மத்தியில் கூறப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்குப் போதுமான முழு கவச உடை, கையுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு மருத்துவ உபகரணம் வழங்கவில்லை எனச் செவிலியர்கள் மத்தியில் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வலியுறுத்தி இன்று (08/05/2020) காலை பணிக்குச் செல்லாமல் அனைத்துச் செவிலியர்களும் பணியைப் புறக்கணித்தும், மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளரை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செவிலியர்கள் கூறுகையில், “மருத்துவமனையில் ஒரே பகுதியில் கரோனா தொடர்பான வார்டு அமைக்கப்படவில்லை.
மருத்துவமனையின் வெவ்வேறு இடங்களில் கரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துப் பகுதியிலும் கரோனா பரவுகிறது.
அதனால் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் முழு கவச உடை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் இன்றுவரை மருத்துவ நிர்வாகம் சார்பில் எந்த உடையும் வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த செவிலியர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றனர்.
மேலும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உறவினர்கள், அதிமுக ஆதரவு சங்கத்தைச் சார்ந்த ஊழியர்களின் உறவினர்கள் பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கு கரோனாவார்டு பகுதி இல்லாமல் மற்ற பகுதிக்குப் பணி ஒதுக்கீடு பாரபட்சமான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனச் செவிலியர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனையறிந்த பல்கலைக்கழகப் பதிவாளர் கிருஷ்ணமோகன் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் செவிலியர்கள் ஊழியர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.