பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரியில் இன்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னை வருகை தந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

இவர்களில் 2 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டனர். இதனால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலையில் உள்ளது.

இதனிடையே புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திடீரென நீக்கி இருக்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

அத்துடன் தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன், புதுவை துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது; எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேர் ஆதரவு இருக்கிறது என முதல்வர் நாராயணசாமி தரப்பு கூறி வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே புதுச்சேரியில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். புதுச்சேரியில் மீனவர்கள், மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.

இதற்காக இன்று காலை சென்னை வருகை தந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், ராகுல் காந்தியை வரவேற்றனர். அதன் பின்னர் புதுச்சேரிக்கு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே