ரஜினி ரசிகர்கள் தான் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம், அதற்கு முன் மன்றத்திலிருந்து தனது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிடவேண்டும் என ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் ரசிக்கப்படுபவர்.

ஏராளமான ரசிகர்கள் அவரது மக்கள் மன்றத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும், உலக நாடுகளிலும் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பின் மூலம் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும், தமிழகத்துக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை.

1996-ம் ஆண்டு ரஜினியின் வாய்ஸ் தமிழக அரசியலில் ஆட்சிமாற்றம் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது. அது முதல் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வந்தாலும் ரஜினி அதை தவிர்த்தே வந்தார்.

2016-க்குப்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றம், ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் இல்லை என்கிற நிலைக்குப்பின் ரஜினி 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்பின்னர் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ரஜினி அரசியல் வருகையை நோக்கியே நகர்ந்தது.

இடையில் ரஜினி மக்கள் மன்றம் வலுபெற்று மாநிலம் முழுவதும் அதற்கான வலுவான கிளைகள் ஏற்படுத்தப்பட்டன..

2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அரசியலுக்கு வருவேன் என உறுதியாக தெரிவித்த ரஜினி 31-ம் தேதி கட்சிப்பெயர் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் உடல்நலப்பிரச்சினை காரணமாக அரசியல் முடிவை கைவிடுவதாக டிச.27 அன்று அறிவித்தார்.

இதையடுத்து அவர் வரவில்லை என்பதை உறுதியாக கடந்த ஜன.11 அன்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஆங்காங்கே ரஜினி மக்கள் மன்றத்தினர் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படும் முடிவை எடுத்தனர். இதிலும் குழப்பம் நீடித்தது.

அதை தீர்க்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

‘ரஜினி மக்கள் மன்றத்துக் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்தக்கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துக்கொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத்தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது’.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே