நவம்பர் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படும் ??

மெரினாவை தூய்மையாக வைப்பதற்கு, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினாவை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர்.

மெரினாவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வந்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை எப்படி சரி செய்ய உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மெரினாஃ லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றியதாகவும், வாழ்வாதாரம் இழந்ததால் வியாபாரம் செய்ய வந்து விட்டதாகவும், மீனவர் சங்க தலைவர்களுடன் கலந்து பேசி, இனிமேல் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என நீதிபதிகள் கேட்டதற்கு பதிலளித்த ஆணையர் பிரகாஷ், மெரினாவில் அனுமதி வழங்கினால் ஏராளமான மக்கள் கூடிவிடுவர் எனவும், மெரினாவில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மெரினாவில் நவம்பர் மாதம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் எனவும்; மெரினாவை தூய்மையாக வைக்க ஏதுவாக கடற்கரையில் தினமும் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், காவல் துறை ஆணையருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

நீதிபதிகளும் நடை பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் எனவும் தெரிவித்தனர்.

பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதி தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினமும் காணொளியில் ஆஜராக இரு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே