இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடரும் – மாநில தேர்தல் ஆணையர் பேட்டி!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை வரை தொடர்ந்து நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்ற தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி.

அப்போது அவர் கூறியதாவது:

  • வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், வாக்குச்சீட்டுகளை வகைப்படுத்தி பிரிக்க, வாக்குச் சீட்டை எண்ணும் அறைகள் என ஒவ்வொரு மையத்திலும் 50 முதல் 60 சிசிடிவி கேமராக்கள் வீதம் சுமார் 16,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகளை பதிவு செய்வதால் முதலில் அவற்றை பிரிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
  • இதற்கு பிறகு எண்ணும் அறைக்கு அனுப்பப்படும்.
  • ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • எங்குமே, வேண்டுமென்று வாக்கு எண்ணிக்கை காலதாமதம் செய்யப்படவில்லை.
  • எத்தனை நாட்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
  • நாளை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கைக்கான ஆரம்பத்தில் சற்று தாமதம் ஏற்படுவது வழக்கம். அதன்பிறகு துரிதமாக வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும்.

இன்று இரவும் தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஊழியர்கள் பணி நேரத்தை மாற்றி பணியில் அமர்வார்கள். ஏனெனில், ஒரு முறை வாக்கு எண்ணிக்கையை தொடங்கிவிட்டால் நடுவே நிறுத்தி அடுத்த நாள் தொடர்வது வழக்கம் கிடையாது என்று பழனிச்சாமி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே