வெடித்துச் சிதறும் எரிமலை – பொது மக்கள் வெளியேற்றம்..!!

ஸ்பெயின் நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி தன் கோர முகத்தை காட்டி வருவதால் சுற்று வட்டார பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தங்கள் அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி வருகின்றனர்.

கேனரி தீவு பகுதியிலுள்ள எரிமலை, திடீரென வெடித்துச் சிதறி லாவா குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால் மலையடிவாரத்திலுள்ள 4 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் வளர்ப்பு விலங்குகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எரிமலை வெடித்துச் சிதறுவதால் 10 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட வேண்டியிருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் எரிமலைக் குழம்பு அருகே பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். சாம்பல் புகை வெளியேறி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என ஸ்பெயின் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எரிமலை வெடித்துச் சிதறுவதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், ஐ.நா., பொதுச்சபை கூட்டத்திற்கு செல்வதற்கான பயணத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே