நகைக் கடன் வழங்கியதில் பல கோடி மோசடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!!

அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் எப்படியெல்லாம் நூதன முறைகளில் நகை கடன், பயிர் கடன் மோசடிகள் நடந்துள்ளது என அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தேர்தல் பணி தொடர்பாக நெல்லை வந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நெல்லை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 4 மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ4,000 வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகண்டுள்ளார். அனைத்து நியாயவிலை கடைகளிலும் தரமான அரிசி கடந்த 3 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பயிர்கடனில் மிகப் பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளது. நிலத்தின் அளவுக்கு மேலாக கடந்த அரசு முறைகேடாக கடன் வழங்கியுள்ளது. போலியான பயிரை காட்டியதோடு நிலத்தின் அளவையும் உயர்த்தி காட்டி கடனை வழங்கியுள்ளனர். அதிமுக அரசு விவசாய பயிர் கடன் வழங்கியதில் முறைகேடு செய்துள்ளது.

நகை கடன் மோசடி

அதுபோன்று கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடகு வைக்காமல் போலி கவரிங் நகைகள் மூலம் கடன் பெற்றுள்ளனர். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து நகைக் கடன்கள் பெற்றுள்ளனர். அன்னயோஜனா திட்டத்தின் அட்டையை வைத்தும் நகைக் கடன்களில் முறைகேடு நடந்துள்ளது. தமிழக அளவில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆட்சியில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. நகைக் கடன்கள் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறும்

மிக விரைவில் கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 3,999 பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையோடு நிரப்பபடும். ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்தப்படும் என அறிவித்தது தேர்தல் ஆணையம், இதனால் ஆளுங்கட்சி முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகள் கூறுகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறும். கட்சி தொடண்டர் தவறு செய்தாலே கடுமையான நடவடிக்கை எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தேர்தலும் நேர்மையாக நடத்தப்படும்.

கூட்டுறவு சங்க தேர்தல்கள்

கூட்டுறவு சங்கங்களில் நடந்த தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். மிக விரைவில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும். கூட்டுறவு கடன் சங்கங்களை, மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கும் பணி 4 மாதங்களுக்குள் முடிவடையும். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே