பள்ளி மாணவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் இருக்க அவர்கள் வெயிலில் சிறிது நேரம் உலவுவது அவசியம் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் பள்ளி மாணவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க, அவர்கள் வெயிலில் விளையாடவும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பாட இடைவெளி நேரத்தில் மாணவர்களை மைதானத்தில் உலவ அனுமதிக்க வேண்டும் என்றும், பாடமில்லாத நேரங்களில் வெட்ட வெளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போட்டிகள் நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.