சென்னை ஐ.ஐ.டியில் படித்த ஜெர்மன் மாணவர் வெளியேற்றம்

சென்னை ஐ.ஐ.டியில் தங்கி பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்று வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர் கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் ஜெர்மனியை ஹிட்லர் ஆளத்துவங்கிய 1933 மற்றும் 1945-ம் ஆண்டில் 2-ம் உலகப்போரில் ஹிட்லர் தோல்வியுற்றதைக் குறிக்கின்ற வகையில் ஆங்கிலத்தில் WE HAVE BEEN THERE என்று எழுதப்பட்ட பதாகையை தன்னுடைய கையில் ஏந்தி போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அன்றைய ஹிட்லர் தலைமையிலான ஆட்சியோடு ஒப்பிட்டு மறைமுகமாக அவர் விமர்சித்தது உறுதியானதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தங்கி பயில்வதற்கான அனுமதியை இந்திய குடியுரிமைத் துறை ரத்து செய்தது.

இதனையடுத்து ஜேக்கப் லிண்டென்ந்தால் சென்னை ஐ.ஐ.டியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே