அரசியல் கட்சிகள் இங்கே நுழையக்கூடாது என பேனர் வைத்த கிராம மக்கள் !!

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிவிட்டு அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மீண்டும் ஏமாற மாட்டோம் என வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது வடக்குபாறைமேடு கிராமம்.

இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தக்கிராமத்திற்கு செல்லவேண்டும் என்றால் கேரள எல்லையை தாண்டி செல்லவேண்டும்.

இங்கு ஒரேயொரு தொடக்கப் பள்ளி மட்டும் தான் உள்ளது.

உயர்நிலை பள்ளியில் படிக்க 2 கிலோமீட்டர் பயணித்து கேரளாவில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

இதுமட்டுமன்றி, கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளியில் மலம் கழிக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையும், கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் ஈமச்சடங்கை நடத்த கேரளாவில் உள்ள மயானத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலையும் நீடிக்கிறது.

இதனால் கோரிக்கைகளை நிறைவேற்றாத எந்த அரசியல் கட்சித்தலைவரும் தங்களது கிராமத்திற்குள் நுழையக்கூடாது என கிராம மக்கள் கிராமத்தின் எல்லையில் பேனர் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பேனர் வைத்த கிராமத்தினரை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே