சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. பின்னர், நேற்று காலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இதனையடுத்து, இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடைபெற்றது. இவர்கள் அனைவரிடமும் பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘கொரோனா காலகட்டத்தில், மாணவர்களை மேலும் குழப்பாமல் தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், +2 தேர்வை ரத்து செய்து, தெளிவான முடிவு எடுத்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே