விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோயினாகும் பிரபல பாடகி

விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் இயக்குநர், பாடலாசிரியர் என பிஸியாக வலம் வரும் விக்னேஷ் சிவன். மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். தற்போது விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி தயாரிக்கிறார்.

இதுதவிர அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்த ‘ராக்கி’, யுவன் சங்கர்ராஜா இசையில் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ ஆகிய படங்களின் உரிமையையும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

விக்னேஷ் சிவனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த விநாயக் இந்தப் படத்தை இயக்குகிறார். ரொமாண்டிக் காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜொனிடா காந்தி. தமிழில்  ‘டாக்டர்’ படத்தில் இவர் பாடிய ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவின் நண்பராக, பைலட்டாக நடித்த கிருஷ்ணகுமார் இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சிஹெச். சாய் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்

இன்று முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே