சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜக-வின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம்

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தியமங்கலம் பகுதியை ஒட்டி உள்ள காடுகளில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தியதாக காவல் துறை வீரப்பனைத் தேடியது.

2004 ஆம் ஆண்டு தேடுதல் வேட்டையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படைத்தலைவர் விஜயகுமார் தலையிலான அணியால் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் மரணத்தில் சமூக ஆர்வலர்கள் சந்தேகங்களை முன் வைத்து கேள்விகளை எழுப்பினர். ஆனால், அவையெல்லாம் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டன.

வீரப்பனுக்கு முத்துலட்சுமி எனும் மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களில் ஒருவர் தான் வித்யா ராணி. வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக வீரப்பனின் மகள் வித்யா ராணி நியமனம் செய்யப்பட்டார்.

கட்சியில் சேர்ந்து ஆறே மாதத்தில் மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டிருப்பது பலருக்கு வியப்பை அளிக்கிறது.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ‘மண் காக்கும் வீரத் தமிழர் பேரமைப்பு’ எனும் அமைப்பை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் வீரப்பனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் விழாக்கள் நடத்தியும் வருகிறார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே