#LIVE : கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மார்ச் 19ஆம் தேதி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தின் மீது கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதை சரிசெய்வதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், எந்த ஒரு வங்கி ஏடிஎம் மையத்திலும் கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என்பது போன்ற அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டார்.

பொருளாதார பேக்கேஜ் பற்றி எப்போது அறிவிக்கப்படும் என்ற நிருபர்களின் கேள்விக்கு, விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றார்.

இந்த நிலையில் இன்று மதியம் 1.15 மணியளவில் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும்.

இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், மாதத்துக்கு 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு அரிசி அல்லது கோதுமை என அவர்கள் எதை வாங்கினாலும், கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை (வாங்குவோரின் விருப்பம்) இலவசமாக வழங்கப்படும்.

ஒவ்வொரு பிராந்தியமும் ஒவ்வொரு வகை பருப்புகளை விரும்புவர்கள். அவர்கள் விரும்பும் பருப்புகளை ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு கிலோ 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் தொடரும்.

மேலும், கிருஷி சம்மான் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு 6 ஆயிரம் வழங்கி வருகிறது.

அவசர நிலையை கருதி, முன்கூட்டியே இந்த திட்டத்தின்கீழ் ரூ.2000 டெபாசிட் செய்யப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் 8.69 கோடி விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பலனாளிகளுக்கு கூடுதலாக ரூ.2000 கிடைக்கும்.

இதனால், 5 கோடி குடும்பங்கள் பலனடையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு உரிமையாளர் மற்றும் பணியாளர் ஆகிய இருவருக்குமான பிஎப் ​​பங்களிப்பை அரசு செலுத்தும். ரூ .15,000 க்கும் குறைவாக ஊதியம் பெறுவோருக்கு இந்த சலுகையை அரசு வழங்கும்.

தொழிலாளர்கள், பி.எப் நிதியிலிருந்து 75 % நிதி அல்லது 3 மாத ஊதியம் இதில் எது குறைவோ அதை முன் பணமாக பெற்று கொள்ளலாம்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்.

ஜன் தன் மகளிர் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ .500 வழங்கப்படும்.

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ .20 லட்சம் அளவுக்கு பிணை இல்லாத கடன்கள் வழங்கப்படும். இந்த கடனால் 7 கோடி குடும்பங்களுக்கு பயன் கிடைக்கும்.

கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நல நிதியை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவு.

3.5 கோடி தொழிலாளர்கள் பயனடைய வாய்ப்பு.

31,000 கோடி நிதியை பயன்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே