இன்னும் 2 நாட்களுக்கு வட மாநிலங்களில் மிக கடுமையான குளிர் நிலவும்

டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிக கடுமையான குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் சமீப நாட்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது.

பல இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி வரை குறைந்ததால் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது. மேலும் பனிமூட்டத்தால் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதே போல 150 மீட்டர் தூரத்தில் இருப்பவற்றை காணமுடியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவி வருவதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இன்று குறைந்தபட்சமாக லோதி சாலை  பகுதியில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 3ம் தேதி வரை மிகக்கடுமையான குளிர் நிலவும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர்,உத்திர பிரதேசம், பிகார், வடக்கு ராஜாஸ்தான், வடக்கு மத்திய பிரதேசங்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் இன்றும் தொடர்கிறது.

31-ம் தேதி முதல் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே