மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை பெயர் மாற்றம் செய்ய வைகோ கோரிக்கை!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என வைகோ எம்.பி, மாநிலங்களவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பேசிய அவர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த மாநிலத்தின் பெயராலேயே உச்சநீதிமன்றங்கள் அழைக்கப்படுகின்றன.

எனவே மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 
சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநில மொழியை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதோடு உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீஹார் ஆகிய மாநிலங்களில் ஆங்கிலத்தோடு, இந்தி மொழியும் நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகிறது.

உச்சநீதிமன்றமும் மாநில மொழிகளில் தீர்ப்புகளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுத்து வருவதை அறிவேன் என்றும், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், ஆங்கிலத்தோடு தமிழையும் பயன்படுத்த சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மாநில மொழிகளை நீதிமன்ற பயன்பாட்டு மொழிகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான நேரம் என்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே