அமெரிக்க அதிபர் டொன்ல்டு ட்ரம்பின் 2 நாள் பயணத்திட்டம்..

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய பயணத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயணத்தில் அவர் எப்போது, எங்கு செல்கிறார் என்ற பயணத்திட்டம் குறித்து பார்க்கலாம்.

24-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கும் டொனால்ட் ட்ரம்ப்-ஐ பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்கிறார்.

அத்துடன், ராணுவ மரியாதை மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிடும் ட்ரம்ப், பின்னர், பிற்பகல் 1.15 மணியளவில் மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் “நமஸ்தே ட்ரம்ப்“ (Namaste Trump) நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதை தொடர்ந்து, அங்கிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு தனது மனைவி மெலானியாவுடன் ஆக்ரா புறப்படுகிறார்.

மாலை 4.30 மணிக்கு ஆக்ரா செல்லும் ட்ரம்பை, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் வரவேற்கிறார்.

பின்னர், 5 மணிக்கு உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை, அரைமணி நேரம் சுற்றிப்பார்க்கிறார்.

ஆக்ராவில் இருந்து 5.30 மணிக்கு டெல்லி புறப்படும் ட்ரம்ப், இரவு 7 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் இரவு விருந்து அருந்துகிறார்.

இரண்டாம் நாளான 25-ம் தேதி, காலை 9 மணிக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர், அங்கிருந்து ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடத்திற்கு செல்கிறார்.

அடுத்ததாக, ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் இருநாட்டு பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

ஹைதராபாத் இல்லத்திலேயே மதிய உணவு அருந்துகிறார். பிற்பகலில் டெல்லி தாஜ் மவுரியா ஓட்டலில் நடைபெறும் வர்த்தக ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இறுதியாக, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் ட்ரம்ப் கலந்துகொள்கிறார்.

இதையடுத்து, இரவு 10 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

ட்ரம்ப்-ன் பிடித்தமான உணவுகளின் பட்டியலில், மீன் உட்பட கடல் உணவுகள், கே.எஃப்.சி, பொறித்த சிக்கன், பன்றி இறைச்சி மற்றும் முட்டை, இறைச்சிகள் இடம்பிடித்துள்ளன.

அத்துடன், மெக்டொனால்டு பர்கர், மீன் வகைகளுடன் கூடிய சேன்ட்விச், பீஸா-வை விரும்பி எடுத்துக்கொள்வார்.

இவற்றுடன் சாக்லேட் ஷேக், சாக்லேட் கேக், டயட் கோக், செர்ரி வெண்ணிலா ஐஸ் கிரீம் ஆகியவற்றை ட்ரம்ப் விரும்பி உட்கொள்கிறார்.

ஆனால், டீ, காபி மற்றும் மதுபானம் எடுத்துக்கொள்வதில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே