ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடந்து 25 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில், ரஷ்ய-உக்ரைன் போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா ஞானகோதரின் உடல் இன்று காலை இந்தியா வந்தது.
நவீன் உயிரிழப்பு:
ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் மார்ச் 1ஆம் தேதி உக்ரைனின் கார்கிவ் நகரில் உயிரிழந்தார். 21 வயதான நவீன் உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். உணவுக்காக வரிசையில் நின்றபோது ரஷ்யப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் பசவராஜ் பொம்மை அஞ்சலி:
நவீனின் உடலை ஏற்றி வந்த விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்தது. பெங்களூரு வந்த நவீன் உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பொம்மை, உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் சேகரப்பா ஞானகோதரின் உடலை நாட்டுக்கு கொண்டு வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நாம் சண்டையில் இழந்தது வருத்தமளிக்கிறது என கூறினார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஹாவேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு நவீனின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.
உடல் தானம்:
என் மகன் மருத்துவத் துறையில் ஏதாவது செய்ய விரும்பினான், அது நடக்கவில்லை. குறைந்த பட்சம் அவரது உடலை மற்ற மாணவர்கள் படிப்புக்கு பயன்படுத்தலாம். அதனால்தான் அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளோம் என நவீன் தந்தை தெறிவித்தார்.
ஒருவருக்கு அரசு வேலை:
விமான நிலையம் வந்திருந்த நவீனின் இளைய சகோதரர் ஹர்ஷா தனது சகோதரரின் உடலை கர்நாடகாவுக்கு கொண்டு வந்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். விமான நிலையத்தில் இருந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் முதல்வர் பொம்மைக்கு நன்றி தெரிவித்தனர். நவீன் குடும்பத்திற்கு கர்நாடக முதல்வர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.