அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் (கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்த போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார். வன்முறையிலும் 3 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 4 ஆனது. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார்.

ஆனால் இந்த வெற்றியை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.

அதேநேரத்தில் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தனர். 

எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நடைபெற்றால் ஜோ பைடன் வெற்றியாளர் என தீர்மானிக்கப்படுவார்.

இதை தடுக்கும் விதமாக கேபிட்டல் கட்டடத்திற்கும் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்ததால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

எம்பிக்கள், துணை அதிபர் மைக் பென்ஸ் என அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வன்முறை மேலும் அதிகரித்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும், வன்முறையில் நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் 3 பேரும் உயிரிழந்தனர்.

இந்த வன்முறையால், பல அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கட்டடத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.

இதனையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரம்ப் கணக்கு முடக்கம்தேர்தல் மற்றும் வன்முறை தொடர்பாக ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்த பின்னர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணி நேரம் முடக்கப்பட்டது.

மேலும் அவர் தனது விதிமுறைகளை மீறும் 3 டுவீட்களை நீக்காவிட்டால் நிரந்தரமாக முடக்கப்படும் என சமூக வலைதளமான டுவிட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல், பேஸ்புக் நிறுவனம் 12 மணிநேரமும், இன்ஸ்டாகிராம் நிறுவனம் 24 மணிநேரமும் டிரம்ப் கணக்கை முடக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே