ஜாமீன் கேட்டு சித்ரா கணவர் ஹேம்நாத் மனு..!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக, தற்கொலை என வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், பின், அவரது கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கில், டிசம்பர் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது எனக் கூறி, சித்ரா மீது சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தனக்கு எதிராக காவல் துறையினர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது என ஹேம்நாத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடனும், தனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை அவரது தாய் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஹேம்நாத், எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று (ஜன. 07) விசாரணைக்கு வந்தபோது, ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பதிலளிக்க இரு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக சித்ராவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டார்.

பின், மனுவுக்கு ஜனவரி 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே