சீனாவின் சதியை அம்பலப்படுத்தியது அமெரிக்கா!

கொரோனா பிரச்சினையை சாதகமாக்கி, இந்திய வீரர்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியது என லடாக் தாக்குதலில் சீனாவின் சதியை அமெரிக்கா அம்பலப்படுத்தி உள்ளது.

லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே பதற்றம் குறைத்து, அமைதியை நிலை நாட்டுவதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தன. இந்த பேச்சு வார்த்தைக்கு மத்தியில் கடந்த 15-ந் தேதி அதே லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்குதியில் ஏற்பட்ட மோதலில், சீன துருப்புகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் இந்த செயல், இந்தியாவை மட்டுமல்ல, ஈர இதயம் கொண்ட அனைத்து நாடுகளையும் உலுக்கி உள்ளது.

இந்த நிலையில், வாஷிங்டனில் நேற்று முன்தினம் கிழக்காசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச்செயலாளர் டேவிட் ஸ்டில்வெல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன துருப்புகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது அவர் சீனாவின் சதியை அம்பலப்படுத்தினார். கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி ஆட்டிப்படைத்துவருகிற நிலையில், உலகின் ஒட்டுமொத்த கவனமும், அதை வீழ்த்துவதில் திரும்பி இருந்தபோது சீனா நிலைமையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டதை அவர் தெளிவுபடுத்தினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர் பிழைப்பதில் உலகத்தின் கவனம் திசை திரும்பி இருக்கிறது. கொரோனா தொற்று நோயில் இருந்து மீள்வதில் உலகம் கவனம் செலுத்துகிறது. இந்த கவன சிதறலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனறால், இந்தியா, சீனா எல்லைப்பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு வருகிறோம்.

இந்தியாவுடனான சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிது இல்லை. இது ஏற்கனவே கடந்த காலத்தில் (டோக்லாம் சந்திப்பில்) நடத்தியது போன்றதுதான். 2015-ம் ஆண்டு என்று கருகிறேன். ஜின்பிங் இந்தியாவுகு முதன் முதலாக சென்றார். அந்த சர்ச்சைக்குரிய பகுதியை வரலாற்றில் இல்லாத வகையில் அதிக துருப்புகளுடன் சென்று சீனா ஆக்கிரமித்தது.

இது பேச்சு வார்த்தை தந்திரமா அல்லது அவர்களின் பலத்தை நிரூபிக்க மூக்கில் குத்துவதா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால் பூடான் அருகே டோக்லாம் பிரச்சினையை பார்த்தபோது, இதே போன்ற கவலைகளை கண்டோம். நான் அதை அறிந்திருக்க விரும்புகிறேன். எங்களுக்கு நிறைய காட்சிநிலை இல்லை. சீன சகாக்களுடன் எங்களுக்கு வெளிப்படையான பேச்சு வார்த்தை இலலை. நேர்மையுடன் சொல்கிறேன். எங்களால் முடிந்தால் அதைப் பார்க்க விரும்புகிறேன்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, சீன வெளியுறவுத்துறை உயர் அதிகாரி யாங் ஜீச்சி இடையேயான பேச்சு வார்த்தையின் போது, இந்திய சீன எல்லை மோதல் விவகாரம் பேசப்பட்டதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் பிராந்தியத்தில் சீனாவின் தற்போதைய நடத்தை குறித்து கவலைப்படுகிறோம்.

இந்தியாவை, தென்சீன கடலை, ஹாங்காங் விவகாரங்களையெல்லாம் நாங்கள் பார்க்கிறபோது, சீனாவின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமானவை அல்ல. சீனாவுடன் நியாயமான, பரஸ்பரமான ஆக்கப்பூர்வமான முடிவு சார்ந்த உறவைத்தான் அமெரிக்கா நாடுகிறது. இது வெறும் பேச்சளவில் இருக்கக்கூடாது. செயல்களிலும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே