மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று போபாலில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்தவர் எல்.முருகன். கடந்த ஜூலை மாதம் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில், எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத மத்திய அமைச்சர்கள் அனைவரும், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்று விதி உள்ளது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். போபால் சட்டப்பேரவையில் மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். அப்போது மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுஹான், மத்தியப் பிரதேச பாஜக நிர்வாகிகள், அம்மாநில அமைச்சர்கள் ஆகியோர் உடன் சென்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே