சென்னையை அடுத்த மாதவரம் ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. 

அங்குள்ள ரவுண்டானா அருகே 120 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்டு, இயங்கி வரும் ஜி.ஆர்.ஆர். லாஜிஸ்டிக்ஸ் கஸ்டம் வேர் ஹவுஸ் என்ற கெமிக்கல் குடோனில், மாலை 3 மணி அளவில் திடீரென தீ பிடித்தது.

தகவல் அறிந்து மாதவரம், செங்குன்றம் மணலி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 6 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

இங்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் டெட்ரோ ஹைட்ரோ என்ற ரசாயன பேரல்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

தீ விபத்தில் ரசாயன பேரல்கள் வெடித்து சிதறியதால், விஷத்தன்மை பரவும் என யாரும் அச்சப்படப்பட வேண்டாமென தீயணைப்புத்துறை டிஜிபி – சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே வசிக்கும் மக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

கொழுந்து விட்டு எரிந்த தீ, அருகிலுள்ள பிளாஸ்டிக் குடோன் மற்றும் ஆயில் குடோன், அலுமினிய குடோன்களுக்கும் பரவியது. கரும் புகையுடன் பல அடி உயரத்துக்கு தீ எரிந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீயை முழுவதுமாக அணைத்தால் மட்டுமே சேத விவரம் குறித்த தகவல் தெரிய வரும்.

மாதவரம் ரசாயன குடோன் தீ விபத்து நிகழ்ந்த இடத்தை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விசுவநாதன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெயலட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே