சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கரூரில் இருசக்கர மோட்டார் வாகன பேரணி

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் வலியுறுத்தும் விதமாக கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் இராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்து இருவரும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ளவும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழா இன்று தொடங்கப்பட்டு ஒருவார காலம் கடைபிடிக்கப்படவுள்ளது.

சாலை பாதுகாப்பு வாரத்தின் முதல் நாளான இன்று மகளிர் கலந்துகொண்ட, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர வாகன பேரணி மற்றும் முக்கிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இருசக்கர பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கரூர் பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.

இந்நிகழ்வில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் பெருமுயற்சியால் போக்குவரத்துத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய முயற்சிகளாலும், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களாலும் தேசிய அளவில் முதல் பரிசிற்கான விருதினை மத்திய அரசு வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.

மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக கரூர் மாவட்ட மக்கள் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும், சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே