ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று நடந்த மோதலில் லஷ்கர் இ தொய்பா தீவிராவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான ரான்பிர்கார்க் பகுதியில் 3 தீவிரவாதிகள் வரை பதுங்கி இருக்கிறார்கள் என்று பாதுகாப்புப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து காஷ்மீர் போலீஸார், ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள் 29 பிரிவினர் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் இன்று காலை முதல் தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். 

இதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் காயமடைந்தார். அவர் 92 பேஸ் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதில் ஒரு தீவிரவாதி பெயர் இஸ்பக் ராஷித். இவர் ஸ்ரீநகர் அருகே இருக்கும் சோஜித் கிராமத்தைச் சேர்ந்தவர்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் கடந்த 2018-ம் ஆண்டு சேர்ந்து காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்பதும், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்தவர் என்பதும் தெரியவந்தது.

மற்றொரு தீவிரவாதியின் பெயர் அஜாஜ் பாட். இவர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர். புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து ஆயுதங்கள், துப்பாக்கிளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் தொடர்ந்து அங்கு தேடுதல் பணிகள் நடந்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே