லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மூளையாக செயல்பட்ட முருகனுக்காக இரு மாநில போலீசார் போட்டா போட்டி நடத்தி உள்ளனர். முருகன் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பலின் தலைவன் முருகனை, யார் கஸ்டடியில் அழைத்து செல்வது என்ற போட்டியில் தான் தமிழக-கர்நாடக போலீசாருக்கு இடையே வாக்குவாதம் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி லலிதா ஜூவல்லரியின் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முருகனின் கூட்டாளி மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்டோர் காவல்துறையினர் வசம் சிக்கினர்.
கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகனை ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் பகளவாடி பகுதியில் 2015ஆம் ஆண்டு ஒரு வீட்டில் 4 கோடி ரூபாயை முருகன் கொள்ளை அடித்துள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த முருகன் தலைமறைவானார்.
இந்நிலையில்தான் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்திற்கு பின்பு முருகன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து முருகனை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். போலீசாரின் நெருக்கடிகளால் முருகன் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பற்கள் உடைந்த நிலையில் பார்த்து வந்த முருகனை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகம் மாறிய நிலையில் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் கர்நாடக போலீசார் முருகனை திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் அழைத்து வந்தனர். இங்குள்ள ஆற்றுப் படுகைப் பகுதியில் முருகன் பதுக்கி வைத்திருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கைப்பற்றிய கர்நாடக போலீசார் பிறகு முருகனையும் அழைத்துக் கொண்டு இரண்டு இன்னோவா கார்களில் பெங்களூரு நோக்கி விரைந்தனர்.
இந்த தகவல் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்-கிற்கு தெரியவர அவர் அளித்த தகவலின்படி, பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் பெரம்பலுர் ஆத்தூர் சாலையில் உள்ள பெங்களூர் பகுதியில் இரண்டு இன்னோவா கார்களையும் மடக்கினர்.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக முருகனை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக போலீசார் கூற அதற்கு பெங்களூரு போலீசார் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தமிழக போலீசாருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கொள்ளை கும்பல் தலைவன் முருகனுடன் சேர்த்து கர்நாடக போலீசார் 7 பேரையும் இனோவா காருடன் மடக்கிய தமிழக போலீசார், அவர்கள் அனைவரையும் பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு வைத்து முருகனிடம் பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன், டிசி மயில்வாகனன் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.