திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இக்கட்டடத்தில் மொத்தம் 24 வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. கட்டடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதைப் பார்த்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற தொடங்கினர். இதனால் உயிர் சேதங்களும் காயங்களும் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்கிடையே யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணமும், மாற்று இடமும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களை சேகரிக்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “திருவொற்றியூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் ஓர் அடுக்குமாடிக் கட்டிடம் திடீரென நொறுங்கி விழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அங்கு குடியிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு முன்கூட்டியே வெளியேறியதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு வசித்தவர்களுக்கு உடனடியாக மாற்று இடங்களைத் தமிழக அரசு வழங்குவதுடன் அதே வளாகத்திலுள்ள எஞ்சிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலைத்தன்மையையும் பரிசோதனை செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி, 20 ஆண்டுகளைத் தாண்டிய குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, அவை மக்கள் வசிக்க ஏற்றவையா? என உறுதி செய்துகொள்ள வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே