நீலாங்கரையில் உள்ள சபரீசனின் இல்லம் உள்பட 8 இடங்களில் சோதனை..!!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலாவின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் மோகன். இவரது மகன் கார்த்திக் வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராகவும் கார்த்திக் மோகன் உள்ளார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகரில் ஏராளமான திமுக தொண்டர்கள் கண்டனப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நிலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், மருமகன் சபரீசனின் நண்பர் என்று அறியப்படும் ஜி ஸ்கொயர் பாலாவுக்குச் சொந்தமான ஜி ஸ்கொயர் அலுவலகம், வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை நடைபெற்று வரும் செந்தாமரையின் வீடு இருக்கும் பகுதியில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமான அளவில் கூடியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே