பணம் விநியோகம் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு..!!

ஆர்த்தி தட்டில் பணம் போட்டதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகமெங்கும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக களமிறங்கியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பிரபலமான, மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்களை அதிமுக களமிறக்கியுள்ளது.

அதன்படி திண்டுக்கல் நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 2011-16 வரை ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய அமைச்சராக வலம் வந்தார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததால், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கினார்.

தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், நத்தம் விஸ்வநாதன் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று கீழ் நத்தம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இவர், அங்கு ஆரத்தி எடுத்தவர்களுக்குப் பணம் வழங்கியதாகக் குற்றச்சாடுகள் எழுந்தன.

இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், தேர்தல் கண்காணிப்புக் குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியராஜ் இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் நத்மத் விஸ்வநாதன் மீது குற்றப்பிரிவு 171E கீழ் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே