எமர்ஜென்சியையே பார்த்தவர்கள் நாங்கள் – ஆர்.எஸ்.பாரதி பேட்டி..!!

”இதுபோன்று ரெய்டுகள் செய்யச் செய்ய மக்கள் ஆதரவு பெருகத்தான் செய்யும். மக்கள் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர் பாட்டுக்கு வேகாத வெயிலில் அலைகிறார். இங்கே இவர்கள் இதுபோன்று ரெய்டு நடத்துகிறார்களே என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ரெய்டு நடக்கும் சபரீசன் இல்லமான நீலாங்கரையில் இருந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:

‘இதையெல்லாம் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. எமர்ஜென்சியையே பார்த்தவர்கள் நாங்கள். 1976-ம் ஆண்டில் எமர்ஜென்சியின்போது தலைவர் கருணாநிதி வீட்டில் ரெய்டு நடந்தபோது அப்போது அவருடன் நான் இருந்தேன். அப்போது தலைவர் என்ன மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலையில்தான் நாங்கள் இப்போது இருக்கிறோம்.

நான் மத்திய அரசைப் பார்த்துக் கேட்க வேண்டியது என்னவென்றால் போன தேர்தலின்போது 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரியில் பிடித்துக் கொடுத்தார்கள். அது யாருடைய பணம் என்று இதுவரை கண்டுபிடித்துள்ளார்களா? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமானது என 89 கோடி ரூபாய் பிடித்தார்கள். நடவடிக்கை எடுத்தார்களா? நாங்கள் திமுக சார்பில் ஆளுநரிடம், லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் கோடிகோடியாக பணம் சேர்த்து வைத்துள்ளார்கள் என்கிற புகார்ப் பட்டியலைக் கொடுத்தோம்.

ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. ரெய்டு பண்ண வேண்டியவர்களையெல்லாம் பக்கத்தில் வைத்துக்கொண்டு எங்களைப் பண்ணலாம் என்று நினைத்தார்களேயேனால் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எங்கள் தலைவர் ஸ்டாலின் 22 வயதில் எமர்ஜென்சியில் கைதாகி பல சித்ரவதைகளை அனுபவித்து வந்தவர். இதெல்லாம் அவருக்கு சித்து விளையாட்டுபோல். ரெய்டெல்லாம் வாழ்க்கையில் பெரிதே கிடையாது.

ஆனால், தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி எல்லாம்,தேர்தலுக்கு இன்னும் 2 நாள்தான் இருக்கிறது. ரெய்டு நடத்த ஏதாவது இருந்தால் இத்தனை நாளில் செய்திருக்கலாம் அல்லவா? 2 நாளுக்கு முன் அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் ஸ்டாலின்தான் வருவார் என்று வந்துவிட்டது. ஆதரவு சேனல்கள் கூட போட்டுவிட்டன. ஆகையால், இந்த இரண்டொரு நாளில் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

இதுபோன்று ரெய்டுகள் செய்யச் செய்ய மக்கள் ஆதரவு பெருகத்தான் செய்யும். மக்கள் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர் பாட்டுக்கு வேகாத வெயிலில் அலைகிறார். இங்கே இவர்கள் இதுபோன்று ரெய்டு நடத்துகிறார்களே என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

கீழே உள்ள தொண்டனை பயமுறுத்த நினைக்கிறார்கள். திமுக தொண்டன் புடம்போட்ட தங்கம். இதற்கெல்லாம் அஞ்ச மாட்டான். ரெய்டு இன்னும்கூட வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்தட்டும். அரசாங்கப் பணம்தான் வீணாகும். சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது’.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே