புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

சொந்த ஊர்களுக்கு ரயில் மற்றும் பஸ்களில் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே கவுல் மற்றும் எம்ஆர் ஷா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தில் வேலையிழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு பஸ்கள் அல்லது ரயிலில் செல்வதற்கு, அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

அவர்கள் பயணத்திற்கான செலவை, தொழிலாளர்கள் கிளம்பும் மற்றும் அவர்கள் சென்றடையும் மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தவித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களே உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். 

உணவு வழங்கும் இடத்தை அறிவிப்பதுடன், புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் ரயில் அல்லது பஸ் எப்போது கிளம்பும் என்பதையும் விளக்க வேண்டும்.

ரயில் பயணத்தின் போது, ரயில் கிளம்பும் மாநில அரசு உணவு மற்றும் தண்ணீர் அளிக்க வேண்டும். வழியில், அதனை ரயில்வே அளிக்கும்.

அதேபோல், பஸ் பயணத்தின் போதும், தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான பயண திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது :

மே 1 ல் இருந்து தற்போதுவரை 91 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களில் 84 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே