பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்…!

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், சென்னையில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல பயணிகள் குவிந்ததால் அங்கு கூட்டம் அலைமோதியது.

பொங்கல் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து, கரூர் மாவட்டம் கரைப்பாளையம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற குளிர்சாதன அரசுப் பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்த அமைச்சர், பேருந்தில் உள்ள வசதிகள், குறைகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார். 

பொங்கல் சிறப்பு பேருந்துகள் கடந்த பத்தாம் தேதியிலிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 800 பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சொந்த ஊர் செல்வதற்காக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும்; முன்பதிவு மூலம் மட்டும் 9 கோடியே 12 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பேருந்து நிலையங்களைப் போன்று சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், பயணிகள் முழுமையான சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே