சோகமும் பயமும் எழுகின்றன: ஓடிடி தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ராதிகா ஆப்தே கருத்து

ஓடிடி தளங்கள் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இது எப்படிச் செல்கிறது என்பதை நாம் ஒரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குக் காத்திருந்து பார்க்க வேண்டும். அனைத்தும் ஒரே நாளில் நடந்துவிடாது என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘தாண்டவ்’ கடந்த ஜனவரி மாதம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களைப் பரிகாசம் செய்வதால் ‘தாண்டவ்’ வெப் சீரிஸைத் தடை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. மனோஜ் கோடக் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை கங்கணா உள்ளிட்ட பலரும் ‘தாண்டவ்’ வெப் சீரிஸை அமேசான் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இத்தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் மன்னிப்பு கோரினார்.

இந்தச் சூழலில் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் மத்திய அரசு சட்ட விதிமுறைகளைக் கொண்டு வந்தது. இதற்கு சினிமா ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் ஒரேசேர எழுந்தன.

இதுகுறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளதாவது:

”நமது கருத்துக்கு மாற்றுக் கருத்து உருவாகும்போது கருத்துச் சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு வாழ்க்கை முறை. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்தால் சோகமும் பயமும் எழுகிறது.

ஓடிடி தளங்கள் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இது ஒரு புதிய தளமும் கூட. இது எப்படிச் செல்கிறது என்பதை நாம் ஒரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குக் காத்திருந்து பார்க்க வேண்டும். அனைத்தும் ஒரே நாளில் நடந்துவிடாது”.

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே