எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம், 12 மொழிகளில் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித் துள்ளது.

‘பாகுபலி’ படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படம், இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்ஆர்ஆர்). இதில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். மற்றும் சமுத்திரக்கனி, இந்தி ஹீரோ அக்‌ஷய்குமார், நடிகை ஆலியா பட், ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி, கொரோனா காரணமாக அக்டோபர் மாதம் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதால், படப்பிடிப்பை நடத்துவது சவாலாக இருந்து வருகிறது. இதனால் இந்தப் படத்தின் ரிலீஸ், அடுத்த வருடத்துக்குத் தள்ளிப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் என்று முதலில் கூறப் பட்டது. ஆனால், பாகுபலி படம், ஜப்பான் மற்றும் சீன மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றதால், இந்தப் படம் அந்த மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

மேலும் ஆங்கிலம், போர்ச்சுகீசியம், கொரியா, துர்கீஷ், ஸ்பானிஷ் (நெட்பிளிக்ஸ் இந்த மொழிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றிருக்கிறது) ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் இந்தி டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனமும் பெற்றுள்ளது. தென்னிந்திய மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமையை டிஸ்னி ஸ்டார் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே